கருவறையில் தொடங்கி கல்லறையில் முடிவது போல, இருளில் தொடங்கி இருளில் முடிவதே வாழ்வு. இருள் இல்லை
என்றால் வெளிச்சத்திற்கு வேலையே இல்லை. வெளிச்சம் புறம் என்றால் இருள் அகம்
தானே. இயற்கையின் ஆகப்பெரும் சக்தியே
இருள்தான். இருளுக்குள் எதுவும் இருக்காது என்று யாராலும் சொல்ல முடியாது.
எல்லாமும் இருக்கும் நம்மால் தான் பார்க்க முடியாது. நாம் மற்றவர்களை தேடிப் போக
வெளிச்சம் தேவைப்படலாம் ஆனால் நம்மையே நாம் தேடிப் போக இருள்தான் தேவைப்படும். புற
அழகை புகழ்வதை விட அக அழகை ஆராதிப்பதே ஆன்ம தரிசனம். அப்படியெனில் அகம் என்பது
அழகிய இருளின் ஞான வெளிச்சம். இப்படிப்பட்ட இருளில் தரிசனங்களை எல்லாம் வெளிச்ச உணர்வுகளின் ஊடாக ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே 'இருள் எனப்படுவது யாதெனில்' நூல். இதில் உள்ள
ஒவ்வொரு கவிதையும் வாசிப்பவரின் மனதில், இருளைப் பற்றிய வெளிச்சப் பூக்கள் பூக்கும் என்பதே
இத்தொகுப்பின் பலம்.
மதுரை மாவட்டம் பணியான்
எனும் ஊரைப் பிறப்பிடமாகவும், சென்னையை
வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி ஏகாதசி அவர்களுக்கு இது பனிரெண்டாம் நூல்.
இயக்குநர், பாடலாசிரியர், கவிஞர் என பல முகங்களைக் கொண்டவர் இவர். மூன்று
திரைப்படங்களை இயக்கியதுடன் 300க்கும் மேற்பட்ட
திரையிசை பாடல்களையும் 500க்கும் மேற்பட்ட
தனி இசை பாடல்களையும் எழுதியுள்ளார். இவரது சிறுகதை ஒன்று கல்லூரியில் பாடமாக
உள்ளது. மேலும் இவரது சில நூல்களை பல
மாணவர்கள் ஆய்வுக்காக எடுத்துள்ளார்கள். புரட்சிக் கவிஞர் விருது, கவிப்பித்தன் விருது, கு.சி.பா அறக்கட்டளை வருது. தமுஎகச விருது, V4 விருது உட்பட எண்ணற்ற விருதுகளைப் பெற்றவர் இவர்
என்பதும் குறிப்பிடத்தக்கது.