நூல் பெயர் : ஒளி பூத்த குடில்
(ஹைக்கூ கவிதைகள்)
ஆசிரியர் : தஞ்சை விஜய்
பதிப்பு : முதற்பதிப்பு 2021
பக்கங்கள் : 108
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : தா.சிவசக்திவேல்
வெளியீட்டகம் : இலக்கியப் படைப்புக் குழுமம்
அச்சிடல் : படைப்பு பிரைவேட் லிமிடேட், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ100
காலம் என்பது ஒரு கற்பிதம். கற்பிதம் என்பது நாம் காணும் காட்சி. காட்சி என்பது ஒளி. இயற்பியலில் ஒளி ஒரு துகள் இயற்கையில் அது ஒரு பகல் அல்லது வெளிச்சம். அண்டம் மற்றும் நேரம் இரண்டையும் இணைக்கும் காரணியாக ஒளியின் வேகம் இருக்கும் என்பது விஞ்ஞானம். அறிவு மற்றும் சிந்திக்கும் திறன் இரண்டையும் இணைக்கும் காரணியாக மூளையின் வேகம் இருக்கும் என்பது ஞானம். அவரவர் வயதுக்கேற்ப சிந்தனை மாறுபடும் அவரவர் சிந்தனைக்கேற்ப இந்த ஞானமும் மாறுபடும். இலக்கியம் என்பதே ஒருவகை அறிவுதான் அதில் சுருங்கச் சொல்லி நிறையச் செய்திகளை சொல்லும் திறனும் ஒருவகை ஞானம்தான். அந்த ஞானமும் எழுத்தில் வருவது ஒருவகை தனித்துவம்தான். அப்படிப்பட்ட தனித்துவ வரிகளை எல்லாம் ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே ‘ஒளி பூத்த குடில்’ நூல். இதில் உள்ள ஒவ்வொரு குறுங்கவிதையும் வாசிப்பவரின் உணர்வுக்குள் ஊடுருவி மனதில் நினைவலைகளைப் போல நீந்திச்செல்லும் என்பதே இத்தொகுப்பின் பலம்.
தஞ்சாவூர் மாவட்டம் தெற்கு நத்தம் ஊரைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி தஞ்சை விஜய் அவர்களுக்கு இது முதல் தொகுப்பு. இவர் நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை மூலம் உதவி பெற்று தனது கல்லூரிப் படிப்பை முடித்தவர். இவரது படிப்புக்காகவும் படைப்புகளுக்காகவும் பல பரிசுகளையும் விருதுகளையும் பெற்றிருக்கிறார். அதில் சாதனை மாணவர் 2021 விருதும், மகாத்மா காந்தி நினைவு விருதும் மற்றும் சங்கரன் கோவிலில் நதிகள் அறக்கட்டளை சார்பில் கலைச் சிற்பி - 2020 விருதும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.