ஒரு தலைமுறையைச் சீர்திருத்திச் செப்பனிட்டு அதன் ஆலகாலங்களை அடுத்தத் தலைமுறைக்குப் பிரதியெடுத்து அளிப்பதில் இலக்கியம் பெரும்பங்கு வகிக்கிறது. இலக்கியமென்பது வெறுமனே கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தல் போன்ற எழுத்தை சுமந்து கொண்டிருப்பது மட்டுமல்லாது நாம் கழற்றிப் போட்ட உணர்வுகளைப் புதுப்பித்துக் கொள்வது. அப்படிப் புதுப்பிக்கையில் ஒவ்வொருவருக்குள்ளும் ஞாபகங்கள் மனிதமாக பூக்கும். இப்பிரபஞ்சத்தின் அடுக்குகளில் தாம் வாழும் காலத்தின் நிகழ்வுகளை, பாதித்தவைகளை வெகுநேர்த்தியாக அடுக்கிவைத்துச் சொல்பவையே கவிதைகள். அப்படிப்பட்ட கவிதைகளை நவீனமாகவும், ஒரு விடயத்தையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல சுருங்கச் சொல்லினும் அதனுள் மலையளவு அர்த்தத்தைப் பொதிந்து வைத்திருக்கும் குறுங் கவிதைகளாகவும், சுமார் 80 களிலிருந்து இந்நாள் வரை எழுதியதை எல்லாம் ஒன்று சேர்த்து தொகுக்கப்பட்டிருப்பதே "இடரினும் தளரினும்" எனும் கவிதைத் தொகுப்பு.
தென்காசியை வசிப்பிடமாகவும் நம்பிராஜன் எனும் இயற்பெயர் கொண்டவருமான படைப்பாளி விக்ரமாதித்யன் அவர்கள் இதுவரை 60 க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிட்டு இருக்கிறார். அதில் "நம் காலத்துக் கவிதை" எனும் கட்டுரைத் தொகுப்பு நம் படைப்பு பதிப்பகம் மூலம் வெளியிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2008ம் ஆண்டின் விளக்கு இலக்கிய விருது, 2014 ஆம் ஆண்டிற்கான சாரல் விருது மற்றும் 2019 ஆம் ஆண்டுக்கான படைப்புக் குழுமத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றுள்ளார்.