நூல் பெயர் : ஏவாளின் பற்கள்
(கவிதை)
ஆசிரியர் : காயத்ரி ராஜசேகர்
பதிப்பு : முதற்பதிப்பு 2020
பக்கங்கள் : 140
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : ரவிபேலட்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ120
அறிவு மரத்திலிருந்த கனியைப் புசித்ததிலிருந்து தொடங்குகிறது, ஏவாளின் சரித்திரம். மனித உயிர்களின் ஆதித்தாய் என்கிறது ஆதியாகமம். கடவுளின் கட்டளைக்குக் கட்டுப்படாததால், வானகத்திலிருந்து வனாந்திரத்துக்கு வருகிறாள் ஏவாள் என்கிறது ஆத்திகம். அதை, மானுட சமூகத்தின் முதல் சுதந்திரமே பெண் சுதந்திரம் என்கிறது நாத்திகம். இவை யாவற்றையும் இத்தனை ஆயிரம் ஆண்டுகளாய் எழுத்தில் வைத்துக்கொண்டு எடுத்துக் கொடுக்கிறது இலக்கியம். சரித்திரத்தை தெரிந்துகொள்ளவோ, சங்க காலத்தைப் பற்றி அறிந்துகொள்ளவோ இலக்கியம் மட்டுமே இப்பொழுதும் சான்று. இதிகாச காலந்தொட்டு, இன்றைய பின்நவீனத்துவம் வரையிலான இலக்கியத்தின் பரிணாம வளர்ச்சி இமாலய அளவுக்கு மாறியிருந்தாலும் அதன் பரிமாணங்கள், அந்தந்த காலத்தின் அடையாளங்களை ஆதாரங்களாக மாற்றியதே இலக்கிய வரலாற்றின் சிறப்பு. அப்படிப்பட்ட பரிமாணங்களில், அகம்சார்ந்த கண்ணாடிவைத்து புறம்சார்ந்த பார்வையொளி செலுத்தி காண்பவர்களுக்குக் கவிதைவழியே காட்சிப்படுத்தியிருப்பதே ’ஏவாளின் பற்கள்’ நூல். வாசிக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் நேசிக்கும் பிம்பம் நீட்சியடையும் என்பதே இந்நூலின் பலம்.
தஞ்சையை பிறப்பிடமாகவும், சென்னையை வசிப்பிடமாகவும்கொண்ட படைப்பாளி காயத்ரி ராஜசேகர் அவர்களுக்கு இது, இரண்டாம் தொகுப்பு. இவரது ‘யாவுமே உன் சாயல்’ என்ற நூல், படைப்பு பதிப்பகம்மூலமே வெளியிட்டு பலரது கவன ஈர்ப்பையும் பாராட்டுகளையும் பெற்றது. இவர், இன்றைய இலக்கிய உலகிலும், பத்திரிக்கை மற்றும் இதழ்களிலும் தன் படைப்புகளால் நன்கு அறியப்பட்டவர். மேலும் படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற அங்கீகாரத்தையும், ’கவிச்சுடர்’ எனும் தனித்துவமான விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.