நூல் பெயர் :
வெயிலின் நங்கூரம் (கவிதைகள்)
நூல் வகைமை : கவிதைகள்
ஆசிரியர் :
மெர்சி பாஸ்கரன்
பதிப்பு :
முதற் பதிப்பு - 2025
பக்கங்கள் :
146
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 200
கவிதை என்பது சொற்களின் கூடாரத்தில் தன்னை ஒளித்து வைத்துக்கொண்டு ஒளியேற்றும் ஓர் ஆபரணம். அது வாசகனின் மூலமே அலங்காரப்படுத்தப்பட்டு தன்னைத்தானே முழுமைப்படுத்திக்கொள்கிறது. கவிதை திட்டவட்டமான பொருளை அல்லது அர்த்தத்தைச் சொல்ல உருவாக்கப்பட்டதல்ல. மாறாக வாசிக்கும் வாசகனின் பார்வைக்கேற்றவாறு மாறும் தன்மையுடையது. அந்த தனித்தன்மையே அதன் பலமும் கூட. அந்த பலத்தை குறைக்கவோ எளிமையாக்கவோ முயன்றால் அது கவிதை வடிவிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு; கட்டுரை, கடிதம் போன்ற வடிவங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும். ஆக கவிதை என்பது சொற்கள் மூலம் வாசகனின் வழியே பாடுபொருளின் தன்மைக்கேற்ப உணர்வை உந்தித் தள்ள முனையும் ஓர் வடிவம். அவ்வுணர்வின் மூலம் தனது பாடுபொருளை பல்வேறு படிமங்களில் வெளியேற்ற கவிதை முனைகிறது என்பதே நிதர்சனம். அப்படிபட்ட வாழ்வியல் கவிதைகளை எல்லாம் உந்தித்தள்ளும் உணர்வுகளாக ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே ‘வெயிலின் நங்கூரம்‘ நூல்.
நெய்வேலியைப் பிறப்பிடமாகவும், சென்னையை வாழ்விடமாகவும் கொண்ட
படைப்பாளி மெர்சி பாஸ்கரன் அவர்களுக்கு இது
முதல் நூல். இள நிலை பட்டதாரியான இவர், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் தன் படைப்புகளால்
நன்கு அறியப்பட்டவர். எளிய மனிதர்களின் வாழ்வியலைப் படம்பிடிக்கும் கவிதைகளை எழுதிவரும்
இவரை, அவரது படைப்புகளைத் தொகுத்து நூலாக்கி இன்றைய இலக்கிய உலகில் ஒரு படைப்பாளியாக
அறிமுகம் செய்துவைத்து வாழ்த்துகிறது படைப்புக் குழுமம்.