பார்வையின் வழியே உள்நுழைந்து ஸ்பரிசத்தின் வழியே வெளியேறும் உயிர்ப்பை எந்தவொரு வார்த்தையாலும் சொல்லிவிட முடியாது. அதனால்தான் இதழின் வழியாக முத்தம் என்று அது முன்மொழியப் படுகிறது.முத்தம் என்பது அன்பின் பரிசு, ஆறுதலின் ஆலிங்கனம், நிம்மதியின் நீட்சி, தாய்மையின் தரிசனம். அப்படிப்பட்ட ப்ரியங்களின் பெயர்ச்சொல்லான முத்தங்களைப் பற்றி ததும்பும் எல்லா உணர்வுகளையும் ஒன்று திரட்டி தொகுக்கப்பட்டிருப்பதே " கன்னத்துப் பூச்சி" எனும் இத் தொகுப்பு. அன்பை ஆராதிக்கும் அனைவருக்கும் இந்நூல் மிகப் பிடிக்கும். நேசிக்கும் நெஞ்சங்களுக்கோ மிக மிகப் பிடிக்கும். அன்பின் ஆழத்தை குறு விதைகளாகத் தூவிவைத்திருக்கிறார். அவைகள் வாசிப்பவரினுள் விருட்சங்களாய் விரியும். சாமான்யர்களுக்கும் புரியும் வகையில் மிக எளிமையாக, எதார்த்தமாக சொல்லி இருப்பது இந்நூலின் பலம்.
கடலூரைப் பிறப்பிடமாகவும், சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி மணி சண்முகம் அவர்களுக்கு இது பத்தாவது தொகுப்பு. சிற்றிதழ்களிலும் பேரிதழ்களிலும் காவல்துறைப் பணியோடு இன்றும் எழுதி வருகிறார். இதுவரை வெளியான இவரது மற்ற தொகுப்புகள் வாசகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.