எறும்பு முட்டுது யானை சாயுது
எறும்பு முட்டுது யானை சாயுது
கவிஜி
ஒவ்வொரு தோல்விக்குள்ளும் ஒரு வெற்றி இருக்கும் ஆனால் ஒரு தோல்வி ஒருபோதும் வெற்றியாகாது. இருப்பினும் எல்லா வெற்றியும் ஏதோவொரு தோல்வியிலிருந்தேதான் வர முடியும் என்ற தத்தத்துவமும்,
ஒவ்வொரு காலையும் இரைத்தேடப் புறப்படும் தாய்ப்பறவை கூடடையும் மாலைப் பொழுதில் இரையை வைத்துக்கொண்டு கூட்டையும் குஞ்சுகளையும் காணாமல் தேடும் கொடுமையை பிரதிபலிக்கும் சமூகத்தையும்.
வாழ்வின் தாத்பரியங்களை, காதல் தண்ணீர் மேல் தவழும் காமத் தாமரையைப்போல பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் வரிகள் வழியே சொல்லும் காதலையும் கலந்து, கனவு காதல் காலம் என
முப்பரிமாணங்களில் காட்சிப்படுத்தி இருப்பதே படைப்புக் குழுமம் வெளியிடும் இந்த "எறும்பு முட்டுது யானை சாயுது..." கவிதை நூல். முப்பது வரிகளில் சொல்ல வேண்டியதை மூன்று வரிகளிலோ அல்லது
சில சொற்களிலோ அடக்கிவிட்ட ஆற்றல் மிகுந்தது இந்த எழுத்து என்பதும், எளிய காட்சிகளில்தான் அடர்த்திமிக்க அடையாளங்கள் அரங்கேறும் என்பதும் இந்நூலை வாசித்தாலே போதும், அது எவ்வளவு உண்மை என்று
புரிய வரும். எளிமையை நேசிக்கும் ஒவ்வொரு இதயமும் இக்கவிதைத் தொகுப்பை தன் எழுத்தாகவே தன் ஸ்பரிசமாகவே நினைக்கும் என்பது இத்தொகுப்பின் பலம்.
வால்பாறையை பிறப்பிடமாகவும் கோவையை வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி கவிஜி அவர்களுக்கு இது நான்காம் தொகுப்பு. வால்பாறையே தனக்கு இலக்கியம் வளர முக்கிய காரணம் என சொல்லும் இவர்
சமூக வலைதளங்களிலும் வார இதழ்களிலும் தன் புதுமையும் புதிரும் நிறைந்த கதைகளாலும் கட்டுரைகளாலும் கவிதைகளாலும் நன்கு அறியப்பட்டவர். மேலும் தன் "ஊதா நிறக் கொண்டை ஊசி கதைகள்"
என்ற சிறுகதை தொகுப்பிற்காக படைப்புக் குழுமத்தின் இலக்கிய விருது -2018 விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.