காலமும் நதியும் ஒரே கருவில் உயிர்த்தெழுந்த இரட்டைக் குழந்தைகள். அழுகையும் துயரமும் காலத்தின் கணக்கீடு, ஆழமும் தூரமும் நதியின் அளவீடு. நிகழ்காலம் இறந்தகாலமாக மாறிய பின்பும் அஸ்தியின் வழியாக ஆற்றில் இறங்கும் ஆன்மாவை அழைத்துக் கொண்டு கடல் சேரும் நதியே காலத்தின் குறியீடு. இதில், கடல் என்பது தேங்கிய நதி.நதி என்பது ஓடிக் கொண்டிருக்கும் கடல். ஓய்வெடுப்பதை ஓய்ந்து போனதாக உலகம் நினைத்துவிடக் கூடாதென்பதற்காகவே அடித்துக்கொண்டு அலைகள் மூலம் கரைக்கு வருகிறது காலநதி. இப்படிப்படிப்பட்ட காலநதியின் ஓட்டத்தை, ஞானத்தின் பாதையில் நகர்த்தி, நகர்வலம் விட தொகுக்கப் பட்டிருப்பதே இந்நூல். புரியாமல் போகும் இப்பெருவாழ்வின் சூட்சமங்களை புரியும் வகையில் எதார்த்தமாக சொல்லி இருப்பதும், கண்களை மூடிக்கொண்டு மனதால் படிக்கும் மாயத்தை காட்டியிருப்பதும் இந்நூலின் பலம்.
நக்கீரன் இதழின் தலைமைத் துணை ஆசிரியராகவும், ’இனிய உதயம்’ இலக்கியத் திங்களிதழின் இணை ஆசிரியராகவும் பணியாற்றி வரும் படைப்பாளி ஆரூர் தமிழ்நாடன் அவர்கள், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் என பல்வேறு இலக்கியப் படைப்புகளுடன் திரைப்படப் பாடல்களும் எழுதிவருகிறார். எண்ணற்ற கவியரங்குகளையும், பட்டிமன்ற, வழக்காடு மன்றங்களையும் தலைமையேற்று நடத்தியிருக்கிறார். ’பெரியார் விருது’, கவிக்கோ விருது போன்ற பல விருதுகளும், ’கவிமாமணி’, ’கவிப்புயல்’, ’கவியருவி’ போன்ற பல பட்டங்களும் பெற்றிருக்கிறார். இவரது முதல் கவிதை நூலான 'கற்பனைச் சுவடுகள்', கலைஞர் கருணாநிதி அவர்களின் அணிந்துரையோடு, அவரது 21-வது வயதில், வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது