நூல் பெயர் : சீன் டபாக்கு டம் டம் (சிறுகதைகள்)
ஆசிரியர் :
ஜபினத்
பதிப்பு :
முதற் பதிப்பு - 2024
பக்கங்கள் :
118
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 160
கடந்தகால நிகழ்வுகளை கருப்பொருளாக எடுத்துக் கொள்ளாமலும், எதிர்கால நிகழ்வுகளை
சித்தரிக்காமலும், நிகழ்கால நடைமுறை வாழ்க்கையையும் எதார்த்த வாழ்வியலையும் ஆதாரமாக
வைத்து எழுதும் கதைகள் எப்போதுமே உயிர்ப்புடன் இருக்கும். காரணம் அதை வாசிக்கும்போது,
அக்கால மனிதர்களால் அக்கதைகளுக்குள் தங்களை கதை மாந்தர்களாக மாற்றிக்கொள்ள ஏதுவாகிறது.
மேலும் எளிதில் நடக்கமுடியாத சம்பவங்களோ, காண முடியாத பாத்திரங்களோ, கேள்விப்படாத பெயர்களோ
விசயங்களோ புகுத்த வேண்டிய அவசியம் எழுத்தாளருக்கும் இருக்காது. இதனால்,
தான் காண்கிற, கேட்கிற, நம்புகிற அனைத்தும் படிக்கிற அனுபவத்திலிருந்து பெறப்படுகிறோம்
என்ற உணர்வும், வாசிக்கும் யாவருக்கும் கிடைக்கிறது என்பது கூடுதல் அம்சம். இவ்வுலகத்தில்
ஒவ்வொன்றினுடைய உண்மையையும் சாரத்தையும் கண்டறிவதற்கு புதுவழிகள் பல இருப்பினும் இலக்கியமே
பொதுவழியாக இருக்கிறது. அதிலும் சிறுகதை இலக்கியம் அவ்வழிக்கான பாதையையும் பயணத்தையும்
எளிதாக்கி விடுகிறது. அப்படி நிகழ்கால சமூகத்தில் ஒன்றிப்போகிற இளைய சக்திகளின் எண்ணங்களில்
ஊடாடுகிற நிகழ்வுகளை கதைகளாக்கி இருப்பதே ‘சீன் டபாக்கு டம் டம்’ எனும் இந்நூல்.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டிணத்தைப் பிறப்பிடமாகவும், சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி ஜபினத் அவர்களுக்கு இது ஒன்பதாவது நூல். இஸ்லாமியப் பெண்ணான இவர் சாரா என்னும் புனைப்பெயரில் எழுதிய கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் இலக்கிய உலகில் கவனம் பெற்றதுடன் பல விருதுகளையும் பெற்றுத் தந்துள்ளது. தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை வழங்கிய மக்கள் கவி இன்குலாப் நினைவு படைப்பாக்க மேன்மை விருது, சௌமா இலக்கிய விருது உட்பட பல விருதுகளுடன் படைப்பு இலக்கிய விருது இருமுறை பெற்று இருக்கிறார். கடந்த ஏழு தொகுப்புகளிலும் புனைப்பெயரான சாரா என்ற பெயரில் அறியப்பட்ட இவர் இனி தன் இயற்பெயரான ஜபினத் என்ற பெயரிலேயே எழுத முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.