மனதில் படுவதை நேரடியாக வார்த்தைகளின் வழியே சொல்லிவிடுவதும், மனதைத் தொடுவதை
நெகிழ்ச்சியாக மௌனங்களின் வழியே சொற்களாக்குவதும், நெஞ்சை விட்டு நீங்காமல் தேங்கிக்கிடக்கும்
நினைவுகளை வரிகளின் வழியே வாழ்வாக்கிக் கொள்வதும், அத்தகைய வாழ்வுதனை எழுதி எழுதி எழுத்தின்
வழியாக ஏகாந்தமாய் வருடிக் கொள்வதும் ஒரு வாழ்விலக்கியமே. அப்படிப்பட்ட வாழ்வின் நிகழ்வுகளை
எல்லாம் ஒன்று திரட்டி நினைவுகளின் சங்கமத்தில் காணிக்கையாக்குவதே ‘முடிவிலியின் நினைவுச்
சங்கிலி’ எனும் தொகுப்பு. இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் வாசிப்பவர்களின் நினைவுகளுக்கு
ஏற்ப வாழ்வின் முடிவிலியை விளங்க வைக்கும் என்பதே இத்தொகுப்பின் பலம்.
கோவையைப் பிறப்பிடமாகவும், சென்னையை
வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி ச.ஆனந்த குமார் அவர்களுக்கு இது முதல் தொகுப்பு. இன்றைய
இலக்கிய உலகிலும், பல பத்திரிகை இதழ்களிலும்
தன் படைப்புகளால் நன்கு அறியப்பட்டவர். மேலும் படைப்பு குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர
சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.