நூல் பெயர் : அகத்தொற்று
(கட்டுரை)
ஆசிரியர் : கரிகாலன்
பதிப்பு : முதற்பதிப்பு 2021
பக்கங்கள் : 108
வடிவமைப்பு : மாஸ், விருத்தாசலம்
அட்டைப்படம் : பழனிவேல் மாசு
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு பிரைவேட் லிமிடேட், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ100
மனிதர்களின் ஆதார உணர்ச்சிகளுள் காதல் முதன்மையானது. ஈராயிரம் ஆண்டுகட்டு முன்பே வளமான காதல் மரபுடையது என்பதே தமிழின் சிறப்பு. மாந்தர் வாழ்வை அகம், புறம் எனப் பகுத்துப் பாடிய செம்மொழி நெறி தமிழுக்கே உரித்தானது. காதல் சுவை சொட்ட, நாடகப் பாங்கோடு கூடிய அகப்பாடல்கள் தமிழரின் வளமான பண்பாட்டைப் பறை சாற்றுபவை. அந்த அகப்பாடல்களை சமகால ரசனையில், கரிகாலன் மொழியில் வாசிப்பது இனிய அனுபவம். என்மனார் புலவர், நோம் என் நெஞ்சே ஆகிய சங்க இலக்கிய நூல்கள் வரிசையில் பேண்டமிக் காலத்தில் எழுதப்பட்ட, “அகத்தொற்று” நூலை வெளியிடுவதில் படைப்பு குழுமம் பெருமை கொள்கிறது. நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை காட்டிய காதல் காட்சிகளை, ஒரு நவீன சினிமாவைப் பார்ப்பதுபோல், அதன் அடர்த்தி குறையாமல் எளிமைப் படுத்தி, இனிமையாக்கித் தந்திருக்கிறார் கரிகாலன். சமகால இளைஞர்களையும் சங்கத் தமிழ் நோக்கி ஈர்க்கும் முயற்சி இது. கல்விப் புலங்களில் வெறும் மதிப்பெண்ணுக்காகப் படிக்கப்படும் அகப்பாடல்களை, அதில் நிரம்பிக் கிடக்கும் இளமையை, புதுமையை, அழகைத் திறந்து காட்டி, அதன் இலக்கிய ஆழத்தை நுகரச் செய்கிற நூல் அகத்தொற்று. தமிழ் இலக்கியப் புலத்தில் நவீன கவிஞராக அறியப்பட்டுள்ள கரிகாலன், சங்கப் பாடல்களை நவீன தொனியில் விவரிப்பது அவரது எழுத்தாளுமையின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டுகிறது. அகப்பாடல்களையும் நுண் அரசியல் பார்வையோடு வாசித்துக்காட்டுவது, அவருக்கே உரிய தனித்துவம்.
சமகால வாசிப்பினூடாகத் தம் அர்த்தங்களைப் புதுப்பித்துக் கொள்ளும் வகையில் சங்க இலக்கியப் பிரதிகள் திறப்புகள் கொண்டதாக இருப்பதை, அகத்தொற்றின் மூலமாக
நாம் அறிய இயலும். திணை வாழ்வு இன்று அழிந்திருக்கிறது. நம் பெரும்பொழுது சிறு பொழுதுகள் மாறி இருக்கின்றன. கருப்பொருள் உரிப்பொருள் மயக்கமுற்றிருக்கின்றன. ஆனாலும் கலித்தொகையும் குறுந்தொகையும் காட்டிய காதல் வாழ்வு தமிழரிடம் உயிர்ப்போடு இருக்கிறது. அவர்கள் மீண்டும் மீண்டும் அகக்கவிதைகளை எழுதிப்பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். அப்படி எழுதும்போது, ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு, நம் முன்னோர்கள் எழுதிய அளவு, நாம் எழுதியிருக்கிறோமா? என ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவும் அவர்களுக்கு இந்நூல் உதவுகிறது.
கடலூர் மாவட்டம் மருங்கூரைப் பிறப்பிடமாகவும், விருத்தாசலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தமிழின் முன்னணிப் படைப்பாளி கரிகாலன். சிற்றிதழ்களிலும் பேரிதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருபவர். இதுவரை வெளியான அவரது மற்ற நூல்களைப் போன்றே இந்நூலும் வாசக மனப்பரப்பில் நீங்கா இடம் பெறுவது திண்ணம். காதலை உள்ளத்தில் தொற்றவைக்கவும், பற்றவைக்கவும், உங்கள் கரங்களில் அகத்தொற்றை அளிக்கிறோம். தமிழர் இன்புறுக!