மன எழுச்சிகள் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டவை. அவையே இலக்கியம்
போன்ற கலைகளை உருவாக்குகின்றன. இதை உன்னதமாக்கல் எனலாம். உதாரணமாக, கணிதம் செய்ய நமக்குச் சிந்தனையும் அறிவும் தேவைப்படுகின்றன. ஆனால் ராமானுஜர் போன்றவர்கள்
கணிதச் சூத்திரங்களை தாங்கள் உணராத நிலையில் உருவாக்கியதை வரலாற்றில் காண்கிறோம். ஆக, தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட நிலையே உன்னதமாக்கல். எனவே எழுதப்பட்ட வரலாறு மட்டுமே
முதன்மையானது அல்ல. இனி எழுதப் போகும் எளிய மக்களின் பதிவுகளும் வரலாறுகளாய் மாறும்.
இதுவரையிலான உலக வரலாறு என்பது தனிமனித மையம் தோன்றி வளர்ந்த வரலாறாகவே இருந்து வந்துள்ளது.
இதில் அந்தத் தனிமனித மையத்தைத் தகர்த்து சுயத்தை எழுத்தில் கொண்டு வருவதே இலக்கியத்தின்
சாதனை. சுயம் என்பது சுயாதீனமானது அல்ல அது மொழி, காலம்,
சமூகம்,
வரலாறு,
பண்பாடு,
இலக்கியம் ஆகியவற்றையும் உள்ளடக்கியதே. இப்படிப்பட்ட கலையின்
செல்நெறிகளை எல்லாம் ஒன்றுதிரட்டி கவிதைகளாக உருவாக்கப்பட்டிருப்பதே 'ஓடிக் கடக்கும் வெயில்'
நூல்.
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் எனும் ஊரைப் பிறப்பிடமாகவும், சென்னையை வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி சலீம் கான் எனும் சகா
அவர்களுக்கு இது முதல் தொகுப்பு. இன்றைய இலக்கிய உலகிலும், சமூக வலைத்தளத்திலும் தன் படைப்புகள் மூலம்
நன்கு அறியப்பட்டவர். படைப்பு குழுமத்தின்
இதயத்துடிப்புகளில் மிக முக்கியமானவர் இவர். படைப்பு குழுமம் ஒரு நிறுவனமாக உயர்வதற்கு
தோள் கொடுத்த தளபதிகளில் முதன்மையானவர். மேலும் தனது அம்மாவின் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் 'அம்மையார் ஹைநூன் பிவி நினைவு' பரிசுப் போட்டிகளை படைப்பு குழுமத்தில்
நடத்தி வருபவரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.