நூல் பெயர் : கவிதை ரசனை (கட்டுரைகள்)
ஆசிரியர் :
விக்ரமாதித்யன்
பதிப்பு :
இரண்டாம் பதிப்பு - 2024
பக்கங்கள் :
294
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 400
சில நேரங்களில் சந்திரனை சுற்றியோ சூரியனை சுற்றியோ ஒரு வகையான ஒளி வட்டம் அமையும்.
இதனை நம்மூர் வழக்கு மொழியில் கோட்டை கட்டியுள்ளது என்று சொல்வர். இந்த கோட்டை கட்டியுள்ளது
என்றால் மழை பெய்யும் என்பார்கள் நம் முன்னோர்கள். இங்கே சூரியன் சந்திரன் என்பது சக
படைப்பாளிகள். ஒளிவட்டம் என்பது அப்படைப்பாளிகளின் படைப்புகளை நாம் வாசித்துவிட்டு
ரசித்து மகிழும் பெருமைமிகு தருணம். அந்த ஒளிவட்டத்தை நம் மனதிற்குள்ளாகவே ரசித்துக்கொண்டு
கோட்டை கட்டி வைத்துக்கொள்ளாமல் அதை மற்றவர்களின் பார்வைக்கும் வெளிச்சம் போட்டு காட்டினால்,
வாசிக்கும் இதயங்களில் எல்லாம் இலக்கிய மழைதான். அப்படி, தான் ரசித்த கவிதைகளை எல்லாம்
மேற்கோள் எனும் ஒளிவட்டம் இட்டு மற்றவர்களின் வாசிப்பிற்கென கட்டுரைகளாகத் தொகுத்திருப்பதே
‘கவிதை ரசனை’ எனும் நூல்.
தென்காசியை வசிப்பிடமாகவும் நம்பிராஜன் எனும் இயற்பெயர் கொண்டவருமான படைப்பாளி
விக்ரமாதித்யன் அவர்கள் இதுவரை 40க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிட்டு இருக்கிறார்.
அதில் ஏற்கனவே பதிப்பித்த இந்த நூலை நம் படைப்பு பதிப்பகம் மூலம் மறுபதிப்பு செய்திருக்கிறோம்
என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2008ஆம் ஆண்டின் ‘விளக்கு இலக்கிய விருது’, 2014ஆம்
ஆண்டிற்கான ‘சாரல் விருது’, ‘கவிஞர் வாலி விருது’, 2019ஆம் ஆண்டுக்கான படைப்புக் குழுமத்தின்
‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ மற்றும் 2021ஆம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருது ஆகியவற்றைப்
பெற்றுள்ளார்.