நூல் பெயர் : வாவ் சிக்னல்
(விஞ்ஞான சிறுகதைகள்)
ஆசிரியர் : ராம் பிரசாத்
பதிப்பு : முதற்பதிப்பு 2020
பக்கங்கள் : 148
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : படைப்பு டிசைன் டீம்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ120
சம்பிரதாயக் கதைசொல்லும் முறையிலிருந்து மாறுபட்ட எந்தக் கதையும் விஞ்ஞானக் கதையின் நவீன அறுதியில் சேரும். கதைமாந்தரே இல்லாமல்கூட ஒரு கதையெழுத முடியுமெனில் அது, விஞ்ஞானக் கதையில்தான் சாத்தியப்படும். எதிர்காலத்தில் நடக்கப்போகும் விஞ்ஞானத்தைப் பற்றி சொல்வது இம்மாதிரியான கதையில் ஒரு வகை. இயற்கை விதிகளை மாற்றிப்போட்டு, அவற்றுக்கிடையே உள்ள புதிய முரண்பாடுகளைச் சொல்லி கதையை நகர்த்தும் வித்தை தெரிந்துகொண்டாலோ அல்லது அமானுஷ்ய உலகின் விதிகள் நம் உலகின் விதிகளுக்கோ, விஞ்ஞான விதிகளுக்கோ மாற்று விதிகளாக அமைந்தாலோ, அமைத்தாலோ போதும் - ஒரு விஞ்ஞானச் சிறுகதையை சுவாரஸ்யமாக்கிவிடலாம்.
அதிலும் கதையில் சொல்லப்படும் விஞ்ஞானம், வாசிப்பவருக்குப் புரியும்படி இருந்துவிட்டால் அந்தக் கதையில் மேலும் சுவாரஸ்யம் கூடிவிடும். அப்படிப்பட்ட சுவாரஸ்யங்களை எல்லாம் ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே ’வாவ் சிக்னல்’ தொகுப்பு. இதில் உள்ள ஒவ்வொரு சிறுகதையும் வாசிப்பவரின் உள்ளுணர்வுக்குள் ஊடுருவி, விஞ்ஞான நினைவலைகளை நகர்த்திச்செல்லும் என்பதே இத்தொகுப்பின் பலம்.
மயிலாடுதுறையைப் பிறப்பிடமாகவும் அமெரிக்காவை வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி ராம்பிரசாத் அவர்களுக்கு இது, பதினொன்றாம் நூல். கணினி மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் இவர், சமூக வலைதளங்கள் மற்றும் இன்றைய இலக்கிய உலகில் தன் படைப்புகளால் நன்கு அறியப்பட்டவர். தமிழில் ஏழு நூல்கள் வெளியிட்டதுடன் ஆங்கிலத்திலும் மூன்று நூல்கள் வெளியிட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.