நூல் பெயர் : கடவுளுக்காக நாத்திகவாதியானவன் (கவிதைகள்)
ஆசிரியர் :
கோசின்ரா
பதிப்பு :
முதற் பதிப்பு - 2024
பக்கங்கள் :
138
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 190
கடவுள் மீது
நம்பிக்கை உடையவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை. இரண்டு
பேருமே தங்களுக்கு தெரியாத ஒன்றைப் பற்றி நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நாம் ஏதோவொன்றின்
மேல் நம்பிக்கை வைக்கும் அந்தத் தருணத்தில், மற்ற அனைத்தையும் பார்க்கத் தவறி விடுகிறோம்
என்பதே எதார்த்தம். இவ்வுலகில் நடக்கும் சண்டைகள் அனைத்தும், அவர்கள் காட்டிக்கொள்வதைப்போல
நன்மைக்கும் தீமைக்கும் இடையில் நடப்பவை அல்ல. இது எப்போதுமே, ஒரு மனிதனின் நம்பிக்கைக்கும்,
இன்னொரு மனிதனின் நம்பிக்கைக்கும் இடையே உள்ள முரண்பாடாகும். நம்பிக்கைக்கான தேவை என்பது,
மத நம்பிக்கையை விடவும், உளவியல் சார்ந்ததாக உள்ளது. நமக்கு ஏதோவொன்றின் மேல் தொற்றிக்கொள்ள
வேண்டும், பாதுகாப்பாக உணர வேண்டும், மற்றும் எல்லாமே தெரியும் என்ற உணர்வுடன் இருக்க
வேண்டும்; இவை அனைத்தும் ஒரு முதிர்ச்சியில்லாத மனதின் வெளிப்பாடு என்பதை நாம் அறியவில்லை.
இந்த பிரபஞ்சத்தைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை என கவலைகொள்ளும் நாம் உண்மையில், நமக்கு
ஒன்றும் தெரியாது என கவலைப்படுவதில்லை. எல்லாவற்றையும் தேடி அலையும் நாம் நம்மை நாமே
தேடிக் கொள்வதேயில்லை. இப்படிபட்ட தேடலுக்கான, மூட நம்பிக்கைக்கு எதிரான எதார்த்தங்களை
எழுத்தில் கொண்டு வந்து கவிதைகளாக உருவாக்கி இருப்பதே ‘கடவுளுக்காக நாத்திகவதியானவன்’ எனும் இந்நூல்.
சேலம் மாவட்டத்தில்
உள்ள தாதம்பட்டி என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகவும் சென்னையை வசிப்பிடமாகவும், கோ.ராசேந்திரன்
என்ற இயற்பெயர் கொண்டவருமான படைப்பாளி கோசின்ரா அவர்களுக்கு இது மூன்றாம் நூல். கடந்த
முப்பது வருடங்களாக கவிதை எழுதி வருகிறார். இவருடைய அரசியல் கவிதைகள் பிரபலமானவை. சமூக
எதார்த்தங்களின் மீது இவருடைய உக்கிரமான பார்வை கவிதைகளாகிறது. என் கடவுளும் என்னைப்
போல கருப்பு என்பது இவரது முதல் கவிதைத் தொகுப்பு. சமூகத்தில் பிரச்னைகள் எழுகிற போதெல்லாம்
இவருடைய விமர்சனங்கள் கவிதைகளாக வெளிவருகின்றன. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
வழங்கிய கவிதைக்கான செல்வன் கார்க்கி நினைவு பரிசு மற்றும் கம்பம் பாரதி அமைப்பு வழங்கிய
இலக்கிய விருதும் பெற்றிருக்கிறார்.