நூல் பெயர் : கீரக்காரம்மா
(சிறுகதைகள் )
ஆசிரியர் : அ.முத்துவிஜயன்
பதிப்பு : முதற்பதிப்பு 2020
பக்கங்கள் : 166
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : படைப்பு டிசைன் டீம்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ 120
எந்த ஒப்பனையும் இல்லாத எளிய மனிதர்களின் வாழ்வென்பது வீதியிலிருந்தே தொடங்கும். அவர்கள் இச் சமூகத்திடம் வாழ்வியலையும் வணிகத்தையும் அன்பினாலே நெய்து விடுகிறார்கள். அதிலும் குறிப்பாக காய்கறி, பழங்கள் மற்றும் கீரை விற்பவர்கள், அந்தப் பகுதியில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் என்னென்ன பிடிக்கும், அது எப்போதெல்லாம் பிடிக்கும் என்பதை மிகத் துல்லியமாகத் தெரிந்துவைத்துக்கொண்டு அவர்களுக்குப் பிடித்தமானதை எடுத்துவந்து சேர்க்கும் மானுடப் பண்பு இருப்பதாலேயே, அவர்களைப் பலருக்கும் உறவாகவே பாவிக்க நேர்கிறது. இம்மாதிரியான நேசத்தின் உறவுகளை எல்லாம் வாழ்வின் கதை சொல்லும் கதாபாத்திரங்களாக மாற்றி, அதை சூழலின் தன்மைக்கேற்ப காட்சிப்படுத்திப் பார்க்கும் சிறுகதைகளாக ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே ‘கீரக்காரம்மா’ தொகுப்பு. இதில் உள்ள ஒவ்வொரு கதையும், வாசிப்பவரை தாமே கதாபாத்திரமாக இருப்பதுபோல உணர வைப்பதும், காட்சிக்கேற்றவாறு அந்தந்த சூழலை அசைபோட வைப்பதும் இத் தொகுப்பின் பலம்.
மதுரையை பிறப்பிடமாகவும் கல்பாக்கத்தை வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி அ.முத்துவிஜயன் அவர்களுக்கு இது, முதல் தொகுப்பு. இவர், சமூக வலைதளங்கள் மற்றும் இலக்கிய உலகில் தன் படைப்புகளால் நன்கு அறியப்பட்டவர். படைப்புக் குழுமத்தில் இவர் பதிவிடும் சிறுகதைகளை சுடச்சுட வாசிக்க ஒரு வாசகர் கூட்டமே காத்திருக்கும். மேலும் படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தை கவிதைக்காகவும் சிறுகதைக்காகவும் இருமுறை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.