நூல் பெயர் : குடையற்றவனின் மழை
(கவிதை)
ஆசிரியர் : கா.அமீர்ஜான்
பதிப்பு : முதற்பதிப்பு 2020
பக்கங்கள் : 120
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : படைப்பு டிசைன் டீம்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ100
மனிதர்கள், வாழும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். வாழ்வதற்கு சுற்றுச்சூழல் தேவை. அந்தச் சுற்றுச்சூழலுக்கு ஒளி, காற்று, நீர், நிலம் மற்றும் ஆகாயம் வேண்டும். இக்கூறுகளைக் கையாள அறிவும் அறிவியலும் வேண்டும். அதற்கு மனிதர்கள் தேவைப்படுகிறார்கள். இப்படியாக, மனிதனும் இயற்கையும் ஒரு மறுசுழற்சி முறைப்படி தங்களைத் தாங்களே தகவமைத்துக்கொள்ளும் தருணத்தில்தான் எழுத்தும் இலக்கியமும் தோன்றி இருக்கக்கூடும். இயற்கையை நேசிக்கத் தெரிந்த மானுடம், இலக்கியத்தையும் நேசிக்கத் தொடங்குகிறது. அப்படித் தொடங்கிய மானுட நேசிப்பின் காட்சிகளை எல்லாம், சமூக வாழ்வின் கவிதைகளாக ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே ‘குடையற்றவனின் மழை’ நூல். இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும், எல்லோருக்கும் புரியும்வகையில் மிக எளிய நடையில் இருப்பதும், அது எதார்த்தங்களை வாசிப்பவர் மனதில் விதைத்துவிட்டுப் போவதும் இத்தொகுப்பின் பலம்.
திருவள்ளுர் மாவட்டம், மேலப்பேடு கிராமத்தைப் பிறப்பிடமாகவும், திருநின்றவூரை வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி கா.அமீர்ஜான் அவர்களுக்கு இது, இரண்டாம் நூல். இவர், சமூக வலைதளங்கள் மற்றும் பத்திரிகைகளில் தன் படைப்புகளால் நன்கு அறியப்பட்டவர். அன்றைய காலகட்டத்தில் வானொலியிலும், நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றிதழ்களிலும் இவரது படைப்புகள் பிரசுரமாகி இருக்கின்றன. இவருடைய தொழிற்சாலையில், இவரால் தொடங்கப்பட்ட ‘முத்தமிழ் மன்றம்’ இன்றும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டு வருகிறது. ஔவை நடராசன், சுரதா, சிலம்பொலி, நன்னன், திருக்குறள் முனுசாமி தொடங்கி, குன்றக்குடி அடிகளார் வரை இம்மன்றத்தில் பேச வைத்திருக்கிறார். பல விருதுகளைப் பெற்றிருப்பதுடன், படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.