நூல் பெயர் : என்மனார் புலவர்
(கட்டுரை)
ஆசிரியர் : கரிகாலன்
பதிப்பு : முதற்பதிப்பு 2020
பக்கங்கள் : 166
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான், மா.சு.பழனிவேல்
அட்டைப்படம் : கமல் காளிதாஸ்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ150
இலக்கியப் பிரதிகள் வாசிப்பினூடாகவே காலந்தோறும் தம் அர்த்தங்களைப் புதுப்பித்துக் கொள்கின்றன. இன்று திணை வாழ்வு அழிந்திருக்கிறது. நம் பெரும்பொழுது சிறு பொழுதுகள் மாறி இருக்கின்றன. கருப்பொருள் உரிப்பொருள் மயக்கமுற்றிருக்கின்றன. ஆனால், வள்ளுவனும் கணியன்பூங்குன்றனும் ஔவையும் இளங்கோவும் கம்பனும் வகுத்த தமிழ் அறமே இன்றளவும் தமிழரின் வாழ்வுக்கு அடிநாதமான இயக்கமாக இருக்கிறது.
பழந்தமிழர் பேசிய சொற்கள் இன்று நமக்குப் புரியவில்லை. அதற்குள்ளிருக்கும் அகப், புறப் பொருள்களை நமக்கு தோதான மொழியில் கரிகாலன் காட்டுகிறபோது, அடடா… இது நமது வாழ்க்கையல்லவா எனப் பத்துப்பாட்டிலும் எட்டுத்தொகையிலும் பதினெண்கீழ்க்கணக்கிலும் நம்முடைய ஆன்மாவைத் தரிசிக்கிறோம். அப்படிப்பட்ட ஆன்மாவின் தரிசனங்களை எல்லாம் ஒன்று திரட்டி தொகுக்கப்பட்டிருப்பதே 'என்மனார் புலவர்' எனும் இத் தொகுப்பு. இந்நூல் சங்க இலக்கியத்துக்கு உரை எழுதும் முயற்சியன்று. சமகால வெளிச்சத்தில் வைத்து நவ வாழ்வை விளங்கிக்கொள்ள உதவும் ஒரு வகை வாசிப்பு அனுபவம். சாமான்யர்களுக்கும் புரியும் வகையில் மிக எளிமையாக, எதார்த்தமாகச் சொல்லி இருப்பது இந்நூலின் பலம்.
கடலூர் மாவட்டம் மருங்கூரைப் பிறப்பிடமாகவும், விருத்தாசலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி கரிகாலன் அவர்களுக்கு இது பதினைந்தாவது தொகுப்பு. சிற்றிதழ்களிலும் பேரிதழ்களிலும் ஆசிரியர் பணியோடு இன்றும் எழுதி வருகிறார். இதுவரை வெளியான இவரது மற்ற தொகுப்புகள் வாசகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.