நூல் பெயர் : அறுவடை (சிறுகதைகள்)
ஆசிரியர் :
ச.உமா கண்ணன்
பதிப்பு :
முதற்பதிப்பு - 2024
பக்கங்கள் :
142
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 200
ஒரு
காட்சியோ, மின்னல் போன்ற நிகழ்ச்சியோ, மெல்லிய அசைவோ, சூறாவளியின் சுழற்சியோ, சின்னஞ்சிறு
மழையோ, நீர்க்குமிழியின் வட்டமோ, ஏதோவொரு அணுவின் சலனமோ கூட சிறுகதையாக மாற முடியும்
என்பதே இலக்கியத்தில் சிறுகதையின் ஆகச்சிறந்த பங்களிப்பு. சிறுகதைக்கு இலக்கணமோ, வரைமுறையோ,
பண்போ கிடையாது என்று சிலர் கூறினாலும் சிறுகதைக்கென இரண்டு நூற்றாண்டு காலப் புதிய
மரபு தோன்றிவிட்டது என்பதே அதன் இருத்தலுக்கான அடையாளம். அப்படிப்பட்ட சிறுகதைகளை,
வாழ்வின் வலியோடு மட்டுமில்லாமல் எதார்த்த நிகழ்வோடும் பிரதிபலிக்கச் செய்திருப்பதும்,
கதைமாந்தரின் உணர்வுகளைச் சிக்கலற்ற நிலையில் வைத்திருப்பதும், விரிவான வருணனைக்கு
இடம்தராமல் சூழ்நிலைக்கேற்ப குறைவான, ஏற்ற சொற்களால் சுட்டிக்காட்டியிருப்பதும், பாத்திரங்களின்
உரையாடல்களில் சொற்கட்டு அவசியத்தை உணர்ந்திருப்பதும், நம்பக் கூடிய உண்மைத் தன்மையினைக்
கொண்டு வாசகருக்கு விளக்கியிருப்பதும், சிறு சிறு கதைகளாக இருந்தாலும் விரிவாகக் கூடிய
கதைக்கருவைக் கொண்டிருக்கிறது என்பதை விளங்க வைத்திருப்பதுமே ‘அறுவடை’ எனும் நூல்.
நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி ச. உமா கண்ணன் அவர்களுக்கு இது இரண்டாவது நூல். இவர் நாகர்கோவில் புனித சிலுவைக் கல்லூரியில் விலங்கியல் முதுகலை பட்டம் மற்றும் மேலாண்மைப் படிப்பில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். கல்லூரியில் படிக்கும் போது நாட்டு நலப்பணித் திட்டத்தில் சிறப்பாகச் செயலாற்றிய இவரைக் கௌரவிக்கும் விதமாக 1990 ஆம் ஆண்டு இந்திய அரசு தேசிய இளைஞர் விருது வழங்கியது. 1991 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு நாட்டு நலப்பணித் திட்டத்துக்கான விருது வழங்கியது. அதன்பின்னர் தென்மேற்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பின் சார்பில் ஜப்பானில் நடைபெற்ற இளைஞர் கூடுகையில் கலந்து கொண்டுள்ளார். 2018ல் தினமணியின் ‘பெண் சாதனையாளர்’ விருதும் பெற்றுள்ளார். அட்டைப் பெட்டித் தொழிற்சாலை ஒன்றை நிர்வகித்து வரும் இவர், சென்னை தி.நகரில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் தொடங்கப்பட்ட பாலமந்திர் காமராஜ் ட்ரஸ்ட் குழந்தைகள் காப்பகத்தின் நாகர்கோவில் கிளையின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார். இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட இவர், ஏற்கனவே ‘மொழி மறந்த மௌனங்கள்’ என்கிற கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.