ஆராய்ச்சிக் கட்டுரை என்பது ஒரு
குறிப்பிட்ட பொருளைக் குறித்து, அனுபவரீதியாகவோ, நூல்களின்
வழியாகவோ, சிக்கல்களுக்குப் பதிலளிப்பதாக இருந்தாலும் முடிவை
விட செயல்முறை மிகவும் முக்கியமானது என்பதாகவோ அமையும். மேலும் அக்கட்டுரை
எல்லோராலும் எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் பயன்படுத்தக்கூடிய தரவுகளை
உள்ளடக்கியும் இருப்பதோடு, வாசகர்கள் பகுப்பாய்வு செய்யும்
விதமாகவும் அமைய வேண்டும். அதிலும் ஹைக்கூ கவிதைகளைப் பற்றிய
ஆய்வு என்பது சுவாரஸ்யமான சவால். காரணம், ஜப்பானில் ஹைக்கூ எனும் கவிதைக்கு வகைமைக்கு நீண்ட நெடிய பாரம்பரிய பின்னணி
இருக்கிறது. ஹைக்கூ தமிழுக்கு வந்த நாள் முதல் இன்றுவரை எழுதிய சில தமிழ்
கவிஞர்களின் ஹைக்கூ கவிதைகளை எடுத்து ஆய்வுசெய்து தொகுக்கப்பட்டு இருப்பதே
"ஷின்டோ" நூல். இந்நூலில் உள்ள ஒவ்வோர்
ஆய்வுக் கட்டுரையும் ஹைக்கூ
கவிதைகளின் தன்மை பற்றியும் அதன் சாராம்சம் பற்றியும் எல்லோரும் எளிதாகப் புரிந்து கொள்ளக்கூடிய வகையில்
இருப்பதே இந்நூலின் பலம்.
திருக்குவளையைப் பூர்வீகமாகவும், தஞ்சையை வாழ்விடமாகவும், பொள்ளாச்சியை வசிப்பிடமாகவும் கொண்டவர் படைப்பாளி கோ.லீலா. இவர், தமிழ்நாடு அரசு நீர்வள ஆதார துறையில், உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இது,
இவரின் ஆறாவது நூல். இவரின் கட்டுரைகள் மற்றும் கவிதைகள் பிரபலமான
பத்திரிகைகளிலும் இதழ்களிலும் பிரசுரமாகி நல்ல வரவேற்று
பெற்றவை. மேலும் படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் ’மாதாந்திர
சிறந்த படைப்பாளி’ என்ற தனித்துவமான அங்கீகாரத்தையும்,
படைப்புக் குழுமத்தின் உயரிய விருதான ’இலக்கியச்சுடர்’
விருதையும் பெற்றவர்.