வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும் நதிக்கு ஜீவநதி
என சொல்வதைப் போல வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும் கதையை நாவல் என்றும் சொல்லலாம்.
கவிதையின் கற்பனை அழகுகளையும், உணர்ச்சி வெளிப்பாடுகளையும் உரைநடையில்
கொண்டு வர முடியும் என்று உணர்த்தப்பட்ட பிறகு, தமிழ் உரைநடைப் படைப்பிலக்கியத்தில் முதலில் தோன்றியது நாவல்
இலக்கியமே. தான் தோன்றிய காலத்துச் சமூக வாழ்வை முழுமையாகப் படம்பிடித்துப் பதிவு
செய்யும் ஒரு கலையாகவும், எதிர்கால வரலாற்று ஆய்விற்கு முக்கியப்
பங்காற்றுவதாக விளங்கும் கருவியாகவும் நாவலே இருக்கின்றன. ஊடல் மொழி தொடங்கி
உரையாடல் மொழி வரை ஒட்டுமொத்த வாழ்வியலையும் ஒரே நேர்க்கோட்டில் கொண்டுவர நாவலைத்
தவிர வேறுவகை இலக்கியமில்லை இக்காலத்தில். அப்படிப்பட்ட நீண்டுகிடக்கும்
வாழ்வியலின் நீட்சிகளை எல்லாம் காணக்கிடைக்கும் காட்சிகளாக ஒன்று திரட்டி
உருவாக்கப்பட்டிருப்பதே ‘எதிர் காற்று' நூல். இதில் உள்ள கதையும், கதை மாந்தர்களும்,
காட்சி மாற்றங்களும் வாசிப்பவரை மண்ணில் விழும்
மழை நீராய் மாற்றும் என்பதே இந்நாவலின் பலம்.
வால்பாறையை பிறப்பிடமாகவும் கோவையை
வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி கவிஜி அவர்களுக்கு இது ஏழாம் தொகுப்பு. வால்பாறையே
தனக்கு இலக்கியம் வளர முக்கியக் காரணம் என சொல்லும் இவர் சமூக வலைதளங்கள் மற்றும்
பிரபல பத்திரிகைகளில் தன் புதுமையும் புதிரும் நிறைந்த கதைகளாலும், கட்டுரைகளாலும், கவிதைகளாலும் நன்கு அறியப்பட்டவர். தன்
‘ஊதா நிறக் கொண்டை ஊசி கதைகள்' என்ற சிறுகதைத் தொகுப்பிற்காகவும், ‘சிவப்பு மஞ்சள் பச்சை' என்ற நாவலுக்காகவும்
படைப்பு குழுமத்தின் இலக்கிய விருதை இருமுறை பெற்றவர். மேலும் படைப்பின் உயரிய
விருதான இலக்கியச்சுடர் விருதும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.