நூல் பெயர் : புதிய மாமிசம்
(கவிதை)
ஆசிரியர் : சந்துரு ஆர்.சி.
பதிப்பு : முதற்பதிப்பு - 2021
பக்கங்கள் : 166
வடிவமைப்பு : பழனிவேல் மா.சு.
அட்டைப்படம் : கமல் காளிதாஸ்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு பிரைவேட் லிமிடட், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ 150
மனதின் அடியாழத்தில் அப்பிக்கிடக்கும் மாற்றுச் சிந்தனையை எழுத்தில் கொண்டுவருவது என்பதே ஒரு புரட்சிதான். போராட துணியாத வரை புரட்சி என்பது கூட வெறும் சொல்தான். காரண காரியங்களுக்கு வெளியே முன் பின்னாக காலம் எப்படி கடந்து செல்கிறதோ, காலத்தின் பல்வேறு அடுக்குகள் எப்படி ஒன்றின் மீது ஒன்று படிந்திருக்கிறதோ அப்படிப்பட்ட போராடும் குணம் கொண்ட சொற்களை கண்டறிந்து அதில் கனவு நிலைப்பட்ட படிமங்களும், தத்துவத்தின் ஆழ்ந்த பார்வையும், மிகைந்த கற்பனையும், புனைவும், மீபுனைவும் சேர்ந்து சரித்திர உண்மைகளை மீள் ஆய்வு செய்யும் கருவிகளைப் போல கவிதைகளை ஒன்று திரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே ‘புதிய மாமிசம்’ நூல். கற்பிக்கப்பட்ட மனச்சித்திரங்களை அழித்து புதிய சித்திரங்களை வரைவதுதான் இக்கவிதைகள் வெற்றி பெறுகிறது. லட்சியவாத உலகை சிருஷ்டி செய்வதோ அல்லது கோட்பாடுகள் மற்றும் சித்தாந்தங்களை நிறுவுவதோ கவிதையின் வேலையல்ல. மாறாக ஆதார குணங்களான அதிகாரமும் வன்முறையும் பற்றி ஆராய்வதும் போராடும் போக்குடைய எழுத்தை எளிய முறையில் புரிய வைப்பதுமே இந்நூலின் பலம்.
செங்கல்பட்டு நகரத்தின் அருகில் உள்ள புலிப்பாக்கம் எனும் கிராமத்தை பிறப்பிடமாகவும், சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி சந்துரு ஆர்.சி. அவர்களுக்கு இது முதல் தொகுப்பு. சிற்றிதழ்கள், பேரிதழ்கள் உட்பட இன்றைய இணய ஊடகங்களிலும் தனது இலக்கியப் பங்களிப்பால் நன்கு அறியப்பட்டவர். படைப்பு குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தையும், கவிச்சுடர் எனும் உயரிய விருதையும் பெற்றவர். மேலும் தனித்தன்மையுடன் தேர்வாகும் படைப்பின் சிறந்த வாசகர் என்ற விருதுக்கு 2019 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.