நூல் பெயர் : யாயும் ஞாயும்
(குறுநாவல்)
ஆசிரியர் : ஜே.ஜே.அனிட்டா
பதிப்பு : முதற்பதிப்பு 2020
பக்கங்கள் : 102
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : படைப்பு டிசைன் டீம்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ100
எழுத்தாளுமை என்பது எதை எழுதுகிறோம் என்பதில் அல்ல; அதை எப்படி எழுதுகிறோம் என்பதில் இருக்கிறது. காலத்தின் சுவடுகளில் கல்வெட்டுபோல தன்னைச் செதுக்கிக்கொள்ளும் எழுத்தே இலக்கிய வானத்தில் சிறகை விரிக்கும். அந்தச் சிறகுகள் எதனாலும் கட்டப்படாத, எதற்கும் கட்டுப்படாத சுதந்திர சிறகுகளாக இருக்கும்பட்சத்தில் ஒளியின் வேகத்தை உமிழும் வல்லமையைப் பெறும். அப்படியான வல்லமையைப் பெற்ற எழுத்துகளைக் கொண்டு ஒரு கருவையும் அதற்கான கதையையும் கதைக்கான பாத்திரங்களையும் வடிவமைக்கும்போது, அதை வாசிக்கும் எல்லா மனிதர்களின் மனதையும் கதைமாந்தர்களாக மாற்றி யோசிக்க வைத்துவிடும். அப்படிப்பட்ட கதைமாந்தர்களின் காட்சிகளை எல்லாம் நிகழ்வின் சாட்சியங்களாக ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே ‘யாயும் ஞாயும்’ தொகுப்பு. இக் குறுநாவலில் உள்ள ஒவ்வொரு பத்தியும் அதன் விவரிப்புகளும் வாசிப்பவரை காட்சிக்கேற்றவாறு அந்தந்த இடத்திற்கே கூட்டிச்செல்வதும் காட்சிகள்மூலம் மனதில் அசைபோட வைப்பதும் இத்தொகுப்பின் பலம்.
திருச்சியை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி ஜே.ஜே.அனிட்டா அவர்களுக்கு இது இரண்டாம் தொகுப்பு. இன்றைய இலக்கிய உலகிலும், சமூக வலைதளங்களிலும், பிரபல பத்திரிகைகளிலும் தன் படைப்புகள்மூலம் நன்கு அறியப்பட்டவர். நவீனத்தை எழுத்துகளில் புகுத்தி புதுமையைக் கையாளும் பெண் படைப்பாளிகளில் கவனிக்கப்படும் படைப்பாளி இவர். படைப்புக் குழுமத்தின் மாதாந்திர பரிசு மற்றும் கவிச்சுடர் எனும் படைப்பின் உயரிய விருதும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.