நூல் பெயர் : வரையாட்டின் குளம்படிகள்
(சூழலியல் கட்டுரைகள்)
ஆசிரியர் : கோ.லீலா
பதிப்பு : முதற்பதிப்பு - 2021
பக்கங்கள் : 144
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : படைப்பு டிசைன் டீம்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு பிரைவேட் லிமிடட், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ 150
இயற்கை எப்போதுமே யாவரையும் வசீகரித்து விடும் வல்லமை கொண்டது. இயற்கையின் ஆயுள் மனிதர்களை விட உயர்வானது. மனிதனின் ஆயுள் நீளவும் இயற்கையின் நீட்சியே ஆதாரமானது. இயற்கை, பருவநிலை, மழை, காற்று, நீர், உணவு, அழிந்துவரும் உயிரினங்கள், பெருகிவரும் வெப்பநிலை, நாம் செய்யும் வேலை - இவையனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய, உதாசீனம் செய்ய இயலாத ஒரு மாபெரும் இயக்கம் என்பதை இன்னும் நாம் புரிந்துகொள்ளவில்லை. நம்மிடம் இயற்கைச் சூழல் குறித்த விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை; காரணம் இயற்கையையும் வளங்களையும் அழிப்பதே நகர்ப்புற வளர்ச்சியும் நாகரிக வளர்ச்சியும் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். இதே மனநிலையில்தான் தமிழகத்தின் மாநில விலங்காக இருக்கும் வரையாடுகளையும் இழந்துகொண்டிருக்கிறோம்.‘வரை’ என்ற தமிழ்ச்சொல் மலையைக் குறிக்கும். ‘ஆடு’ என்பது, இந்த உயிரினம் ஆட்டினத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும். மலைகளில் வாழ்கின்ற ஆடுகள் என்கிற பொருளில் வரையாடு ஆனது. இதைத்தான் சீவகசிந்தாமணி இப்படிக் குறிக்கிறது: ‘ஓங்கு மால்வரை வரையாடு’. இப்படி இயற்கையையும் சங்க இலக்கியத்தையும் ஒப்புமைப் படுத்தி உருவாக்கப் பட்டிருப்பதே 'வரையாட்டின் குளம்படிகள்' நூல். தமிழில் சுற்றுச் சூழல் குறித்து எழுதுவோர் மிகக் குறைவு. அதிலும் வெகுஜன ஊடகங்களில் சாதாரண மக்களைச் சென்றடையும் விதம் எழுதுவோர் இன்னும் குறைவு அதைத் தகர்த்து இந்நூலும் இந்நூலாசிரியரும் இனி கவனம் பெறுவார்கள் என்பதே இந்நூலின் பலம்.
திருக்குவளையை பூர்வீகமாகவும், தஞ்சையை வாழ்விடமாகவும், பொள்ளாச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட, தமிழ்நாடு அரசு நீர்வள ஆதாரத் துறையில், உதவி செயற்பொறியாளராகப் பணியாற்றும் படைப்பாளி கோ.லீலா அவர்களுக்கு இது, நான்காவது நூல். இவரது கட்டுரைகள் மற்றும் கவிதைகள் பல பிரபல பத்திரிகைகள், இதழ்களில் பிரசுரமாகி இருக்கின்றன. மேலும் படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தையும், படைப்பின் உயரிய விருதான இலக்கியச்சுடர் விருதையும் பெற்றவர். படைப்பு பதிப்பகம் வெளியிட்ட இவரது முதல் நூலான ‘மறைநீர்’, எண்ணற்ற விருதுகளைப் பெற்றிருப்பதுடன் கடந்த இருபது ஆண்டுகளில் வெளிவந்த சிறந்த பத்து நூல்களில் ஒன்றாக இந்நூலை, விகடன் தேர்வு செய்து பெருமைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. படைப்பு பதிப்பகம் வெளியிட்ட, ஹைக்கூ தூண்டிலில் ஜென் எனும் இவரது இரண்டாவது நூலில், ஹைக்கூ கவிதைகள் மீதான ஆய்வுக் கட்டுரையை எழுதியதன் மூலம் தமிழ்நாட்டில் ஹைக்கூவை ஆய்வு செய்த நான்காவது பெண்ணென வரிசைப்படுத்தப்படுகிறார்.