நூல் பெயர் : நீராக இளகும் நிழல் (கவிதைகள்)
ஆசிரியர் :
கார்த்திக் திலகன்
பதிப்பு :
முதற்பதிப்பு - 2024
பக்கங்கள் :
118
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 170
வாழ்வின் துயரங்களிலிருந்து விலகியிருக்க விரும்பினாலும்,
தனிமையின் வெறுமையை வாழ்விலிருந்து விலக்கிவைக்க விரும்பினாலும் இலக்கியத்தின் பக்கம்தான்
செல்ல வேண்டும். இன்றைய உலகம் நவீனத்தை, கலாச்சாரத்தில் வாழ்க்கைமுறை வழியே ஏற்றுக்கொண்டதற்கு
முன்பாகவே இலக்கியத்தில் அணுகுமுறை வழியாக தன்னைத் தகவமைத்துக் கொண்டது. அதன் பயனாக
இலக்கியம் படித்தவர்களிடம், தன் வாழ்வை தான் தீர்மானித்துக்கொள்ள சமூகத்தை விட ஒரு
தனிமனிதனுக்கே முழு உரிமையும் உண்டு என்ற எண்ணம் வலுபெற்றது மேலும் கலை இலக்கியம் என்பது
மதத்தைப் பரப்புவதும் சமய போதனைகள் செய்வதும் என்பது மாறி விழுமியங்களைக் கேள்வி எழுப்பும்
படைப்புகளாக நவீனம் உருவாக்கியது. எனவே எழுதப்படும் ஒன்று ஒரு குறிப்பிட்ட மொழியோடு
முடங்கிவிடாமல் அதன் தரமும் வீச்சும் உலக இலக்கியங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் சூழலை
ஏற்படுத்தியது. இது வரையிலான உலக வரலாறு என்பது தனிமனித மையம் தோன்றி வளர்ந்த வரலாறாகவே
இருந்துவந்துள்ளது. இன்று அந்த தனிமனித மையத்தை தகர்த்துக் கொண்டிருப்பதே நவீன இலக்கியம்
செய்த சாதனைதான். அப்படிப்பட்ட நவீனத்துவத்துவ வரிகளை எல்லாம் ஒன்று திரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே
‘நீராக இளகும் நிழல்’ நூல்.
கடலூரை வசிப்பிடமாகக் கொண்ட படைப்பாளி கார்த்திக் திலகன் அவர்களுக்கு இது ஐந்தாம் நூல் . இவரது இரண்டாம் நூலான ‘அந்த வட்டத்தை யாராவது சமாதனப் படுத்துங்கள்’ நூல் 2019ஆம் ஆண்டுக்கான படைப்பின் இலக்கிய விருதை பெற்றுள்ளது. இவரது ‘விண்ணைச் சூடியாடும் இரு நீல வளையங்கள்’ நூல், சௌமா விருது உட்பட பல விருதுகளையும், ‘அல்லியம்’ நூல், ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுடன் பலரது கவனத்தையும் பெற்றது. இவ்விரு நூல்களும் படைப்பு பதிப்பகம் மூலமே வெளியிடப்பட்டன என்பது கூடுதல் சிறப்பு. இன்றைய இணைய ஊடகங்களிலும் பல பிரபலமான பத்திரிகைகளிலும் தனது இலக்கிய பங்களிப்பால் நன்கு அறியப்பட்டவர். படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தையும், கவிச்சுடர் எனும் உயரிய விருதையும் பெற்றவர் மேலும் படைப்பு பரிசுப்போட்டியில் கவிஞர் வண்ணதாசன் அவர்களால் தேர்வு செய்யப் பட்டவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.