புத்தன் மீன் வளர்க்க ஆசைப்படுகிறான்
நூல் பெயர் : புத்தன் மீன் வளர்க்க ஆசைப்படுகிறான்
(கவிதை)
ஆசிரியர் : வழிப்போக்கன்
பதிப்பு : முதற்பதிப்பு 2020
பக்கங்கள் : 86
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : வழிப்போக்கன்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ100
ஆசை என்பது ஆசைப்படுவதற்கானது மட்டுமல்ல, அது அடிப்படைக்கானது. இருள், வெளிச்சம், இசை, நிசப்தம், வாசம், ஸ்பரிசம், அன்பு, ஆனந்தம், ஆற்றாமை, ஆன்மீகம், கல்வி, காதல், கலவி, தெய்வீகம் இன்னும் பல இத்யாதிகளின் அடிப்படை மூலம் கூட ஆசையிலிருந்தே உயிர் பெறுகின்றன. உயிர் வாழ ஆசைப்படாத எந்த உயிர்களும் இந்த உலகில் இல்லை என்பது அதை உறுதிப்படுத்துகிறது. புத்தன் ஆசைப்படவில்லை என்றால் என்ன? போதிமரம் ஆசைப்பட்டிருக்கலாமே என்ற மாற்றுச் சிந்தனையில் தொடங்கி, மனம் எவ்வாறெல்லாம் இப்படியாக மாற்றி யோசித்து மாட்டிக் கொண்டதோ அதையெல்லாம் கவிதைகளாக ஒன்று திரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே ‹புத்தன் மீன் வளர்க்க ஆசைப்படுகிறான்› தொகுப்பு. நாம் நேராகப் பார்க்கும் யாவும் நம் விழித் திரையில் தலைகீழ் பிம்பமாக விழுந்து மூளைக்குச் செய்தி அனுப்புகிறது என்ற அறிவியல் உண்மையே இந்த நூலுக்கான மிகப்பெரும் புரிதல்.
காஞ்சிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி வழிப்போக்கன் அவர்களுக்கு இது மூன்றாம் கவிதைத் தொகுப்பு. ‘நீராக இருந்தால் ஆறாக ஓடித்தான் ஆகவேண்டுமா?’ என்று யதார்த்தத்தைக் கூட எதிர்த் தாக்குதலில் இருந்தே எதிர்நோக்கும் யதார்த்தவாதி இவர். “நீ நினைப்பதல்ல நீ..! நீ நிரூபிப்பதே நீ..!!” என்று அவர் சொல்வதோடு மட்டுமல்லாமல் ஓவியராகவும், ஒளி ஓவியராகவும் (புகைப்படக் கலைஞராகவும்) தன்னைப் பன்முகத் திறமையாளராக நிரூபித்துள்ளார். இன்றைய இலக்கிய உலகிலும் சமூக வலைத்தளத்திலும் தன் படைப்புகள் மூலம் இவர் நன்கு அறியப்பட்டவர். மேலும் தனது இந்த நூலுக்கு அவரே அட்டைப்பட வடிவமைப்பும் செய்துள்ளார்!