உணர்ச்சியோட்டம் உடையதாக அமைக்கப்படுவதும், சங்கிலித்தொடர் போன்று கதைமாந்தர்களிடையே பின்னிப்பிணைந்து காணப்படும் காட்சிகளை வைப்பதும், கருப்பொருள் எளிமையானதாக இருக்கும்படி பார்த்துக்கொள்வதும், வாசிக்கும் நேயர்களுக்கு சிறு நம்பிக்கையூட்டுவதாகக் காணப்படுவதும், மையக்கருவை அல்லது நிகழ்ச்சியின் அனுபவத்தை விவரிக்கும் நேர்க்கோட்டுப் புள்ளியாக நின்றிருப்பதும், சுருக்கமான, கதைகூறும் புனைவு வகை உரைநடை இலக்கியமாக இருப்பதுமே, சிறுகதை. உணர்வுள்ள இச்சிறுகதைக்குள், வாழ்வியலைச் சேர்க்கும்போது உயிர் வந்துவிடுகிறது. அப்படிப்பட்ட உயிரோட்டமுள்ள சிறுகதைகளை எல்லாம் ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே 'ஏக வெளி' நூல். இதில் உள்ள ஒவ்வொரு சிறுகதைக்குப் பின்னே உள்ள படைப்பாளரின் கலை ஆற்றல், கற்பனைத் திறன், சொல்லாட்சி, அவர் மறைமுகமாகக் கூறும் செய்தி இவையனைத்தும் இத்தொகுப்பின் பலம்.
சேலத்தைப் பிறப்பிடமாகவும், பெங்களூரை வசிப்பிடமாகவும்கொண்ட படைப்பாளி மதுசூதன் அவர்களுக்கு இது, மூன்றாம் தொகுப்பு. இவரது முதல் மற்றும் இரண்டாம் கவிதைத் தொகுப்புகள், படைப்பு பதிப்பகம் மூலமே வெளிவந்து பலரது கவனத்தைப் பெற்றது. இணையத்தில் படைப்பு உட்பட பல தளங்களிலும் இவர் கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு பதிவாகிக்கொண்டிருக்கிறது. படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் ‘மாதாந்திர சிறந்த படைப்பாளி’ என்ற தனித்துவமான அங்கீகாரத்தையும், ‘கவிச்சுடர்’ எனும் உயரிய விருதையும் பெற்றவர். மேலும் படைப்பு பரிசுப் போட்டிகளில், கவிஞர்கள் வண்ணதாசன் மற்றும் யவனிகா ஸ்ரீராம் அவர்களால் தேர்வு செய்யப்பட்டவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.