பூக்காரியின் மந்திரக்கோல்
நூல் பெயர் : பூக்காரியின் மந்திரக்கோல்
(கவிதை )
ஆசிரியர் : பூங்கோதை கனகராஜன்
பதிப்பு : முதற்பதிப்பு - 2022
பக்கங்கள் : 92
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : படைப்பு டிசைன் டீம்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு பிரைவேட் லிமிடெட், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ 100
வெறுமைக் கண்களுடன் ஆகாயத்தை வேடிக்கைப் பார்த்தால் வெறும் வானம் மட்டுமே தெரியும். அதுவே கவிதைக் கண்களுடன் நோக்கினால், வசப்படும் தூரத்தில் வானம் தெரியும். அதில் நெற்றிப்பொட்டென நிலவு தெரியும், துரத்திக் கொண்டோடும் துருவ நட்சத்திரங்கள் தெரியும், மேற்குத் தொடர்ச்சி மலைகள் போல மேகங்கள் தெரியும், சூடிக்கொடுத்த சுடர்க்கொடி போல சூரியனும் தெரியும். இலக்கியம் என்பது எழுதும் எழுத்தில் மட்டுமல்ல பார்க்கும் பார்வையிலும் இருக்கிறது. இப்படியாகத் தான் பார்த்த, பாதித்த, ரசித்த, சிந்தித்த காட்சிகளை எல்லாம் ஒன்றுதிரட்டி கவிதைகளாக உருவாக்கப்பட்டிருப்பதே 'பூக்காரியின் மந்திரக்கோல்' நூல். இந்நூலில் உள்ள கவிதைகள் ஒவ்வொன்றும் எதார்த்தங்களின் சிம்மாசனத்தில் மேல் ஏணி வைத்து உட்கார்ந்து கொண்டிருக்கும். அது வாசிப்பவர்களின் மனதிற்குள் வரிகளின் வழியே நிகழ்வுகளை எல்லாம் நேரில் காண்பவை போல காட்சிப்படுத்திக் கொண்டிருக்கும் என்பது இத்தொகுப்பின் ஆகப்பெரும் பலம்.
சேலம் ஆத்தூரை வாழ்விடமாகக் கொண்ட படைப்பாளி பூங்கோதை கனகராஜன் அவர்களுக்கு இது இரண்டாம் நூல். இவரின் முதல் கவிதை நூல் இன்றைய இலக்கிய உலகில் பலரது பாராட்டைப் பெற்ற வண்ணம் உள்ளது. இவர் சமூக வலைதளங்கள் மற்றும் பிரபல பத்திரிகைகளில் தன் புதுக்கவிதைகளால் நன்கு அறியப்பட்டவர். தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டதாரியான இவர் இயற்கை ஆர்வலராகவும் இருப்பது சிறப்புக்குரியது. சமூகப் பங்களிப்பிற்காக எண்ணற்ற விருதுகளைப் பெற்றிருப்பதுடன் படைப்பு குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தையும் பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.