logo

சாய்ந்தது மரம் சாய்த்தது கரம்


நூல் பெயர்                :  சாய்ந்தது மரம் சாய்த்தது கரம் (ஹைக்கூ)

ஆசிரியர்                    :  தஞ்சை விஜய்

 

பதிப்பு                          :  முதற்பதிப்பு - 2024

 

பக்கங்கள்                  :  138

 

வெளியீட்டகம்          :  இலக்கிய படைப்பு குழுமம்

 

வெளியீடு                  :  படைப்பு பதிப்பகம்

 

விலை                         :  ரூ 200

உலகத்தில் உதவி செய்ய மட்டுமே உருவான ஒரே உயிர் தாவரம். மனிதர்களைப்போல அல்ல மரம். சுயமாக நிலத்தில் நின்றாலும் ஒருபோதும் சுயநலத்தில் நின்றதில்லை. தான் வெயிலில் நின்று கொண்டிருந்தாலும் தன்னிடம் வந்தவருக்கு நிழல் கொடுக்க மறப்பதில்லை. தான் மழையில் நனைந்து கொண்டிருந்தாலும் மற்றவருக்கு குடை பிடிக்க மறுப்பதில்லை. இனி மரம்போல ஏன் அப்படியே நிற்கிறாய் என மனிதனைக் கேட்டு மரத்தை அவமானப்படுத்தாதீர்கள். இருந்தால் மரம் இறந்தால் உரம் என எல்லாவற்றையும் துறந்து வாழும் இயற்கையின் துறவரம் மரம். அதனால்தான் கீழே உட்கார்ந்தவனுக்கு ஞானத்தைக் கொடுக்கிறது. தன்னை வெட்டியவனுக்கும் கனியைக் கொடுக்கிறது. இப்படி இயற்கையைப் பற்றியும், இயற்கையிடம் கற்றுக் கொள்ள வேண்டியதைப் பற்றியும் சமூகப்பார்வையில் ஹைக்கூக்களாக ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே “சாய்ந்தது மரம் சாய்த்தது கரம்” நூல்.

 

தஞ்சாவூர் மாவட்டம் தெற்கு நத்தம் கிராமத்தை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி தஞ்சை விஜய் அவர்களுக்கு இது ஐந்தாம் நூல். இதுவரை இவர் எழுதிய நான்கு நூல்களும் நம் படைப்பு பதிப்பகத்தின் மூலமாகவே வெளியிடப்பட்டு பலரது கவனம் பெற்றது. இவர் நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை மூலம் உதவி பெற்று தனது கல்லூரி படிப்பை முடித்தவர். இவரது படிப்புக்காகவும் படைப்புகளுக்காகவும் பல பரிசுகளையும் விருதுகளையும் பெற்றிருக்கிறார். பல இதழ்களில் இவரது படைப்புகள் வெளிவந்து உள்ளன. கடலூரில் நெற்களஞ்சிய கவி விருது, மதுரையில் சமூக சிந்தனைக்கவி விருது மற்றும் புதுக்கோட்டையில் கவிச்சுடர் விருதும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.