மேலிருக்கும் எல்லாவற்றையும் கீழ்நோக்கி இழுப்பது புவி ஈர்ப்பு சக்தி. புவியிலிருக்கும் எல்லோரையும் மேல் நோக்கி இழுப்பது விழி ஈர்ப்பு சக்தி. முதலாவது காலத்தின் கட்டாயம் இரண்டாவது காதலின் கட்டாயம். காதலென்பது இருவேறு துருவங்களின் காந்த ஈர்ப்பு. அது எதிரெதிர் திசையில் இருந்தாலும் நேசிப்பு எனும் நேர்க்கோட்டில் ஒன்றாகவே பயணிக்கும். ஓருயிரும், ஈருடலும், முக்கனிகளும், நான்கு வேதங்களும், பஞ்ச பூதங்களும், அறுசுவைகளும், ஏழு வண்ணங்களும், எட்டுத் திசைகளும், ஒன்பது கோள்களும், காதலெனும் பத்து கட்டளைகளுக்குள் அடங்கி விடும். இப்படிப்பட்ட காதலின் கால மாற்றத்தை எல்லாம் கவிதைகளாக ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே 'பெறுநர், தேவதை, வானவில் வீதி - 143' நூல். இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் காதலின் ரீங்காரத்தை நமக்குள் இசையாக மாற்றி மனதுக்குள் அசைபோட வைப்பதுமே இந்நூலின் பலம்.
சென்னையை வசிப்பிடமாக கொண்ட படைப்பாளி துளசி வேந்தன் அவர்களுக்கு இது இரண்டாம் தொகுப்பு. ஹூண்டாய் கார் தயாரிப்பு நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரியும் இவர், இன்றைய இணைய ஊடங்களில் தனது இலக்கியப் பங்களிப்பால் நன்கு அறியப்பட்டவர். இவரது முதல் கவிதைத் தொகுப்பை, ’படைப்பு பதிப்பகம்’ மூலமாகவே வெளியிட்டு பலரது கவனத்தைப் பெற்றவர். மேலும் படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் ’மாதாந்திர சிறந்த படைப்பாளி’ என்ற தனித்துவமான அங்கீகாரத்தைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.