நூல் பெயர் : நீ பாரித்த என் உதடுகள்
(கவிதைகள் )
ஆசிரியர் : மா.காளிதாஸ்
பதிப்பு : முதற்பதிப்பு - 2022
பக்கங்கள் : 106
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : படைப்பு டிசைன் டீம்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு பிரைவேட் லிமிடெட், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ 100
தீரா பிரியங்களின் மேல் உருளும்
கோலிக் குண்டுகளைப் போல இந்த காதல், வாழ்வெனும் பெருவெளியில் கண்களின் வழியே வாணவேடிக்கை காட்டிக்
கொண்டிருக்கும். மனதுக்குள் மத்தாப்புகளை சூடிக்கொள்ளும். இதயத்துடிப்புகளின் அலை
வரிசையில் கடிதங்களை கவிதையின் இசையாக மொழிபெயர்த்து கொண்டிருக்கும். தவிப்புகளின்
ரீங்காரத்தினூடே பிறை சூடும் வானவில்லாய்
பார்த்த முகம், நிறங்களாய் உதிர்ந்து
நெஞ்சத்தில் நிறைந்திருக்கும். அவ்வாறான காதலின் சங்கதிகளை எல்லாம் சங்கீதங்களாக
உருமாற்றி உருவாக்கப்பட்டிருப்பதே மா. காளிதாஸின் 'நீ பாரித்த என் உதடுகள்' எனும் இத் தொகுப்பு. நவீனமாக
இருப்பதும் அதை ரசிக்கும் வகையில் காட்சிப்படுத்தி சொல்லி இருப்பதும், காட்சிகளை உடைக்கும்
காதலை கவிதையாக எழுதி புரிய
வைப்பதும் இந்நூலின் பலம்.
தென்காசி மாவட்டம்
சிவகிரியை அடுத்த ராயகிரியைப் பிறப்பிடமாகவும், மதுரையை வசிப்பிடமாகவும்
கொண்ட வணிகவியல் முதுகலைப் பட்டதாரி ஆசிரியரான படைப்பாளி மா.காளிதாஸ் அவர்களுக்கு
இது எட்டாம் தொகுப்பு. இவரது ஐந்து
மற்றும் ஆறாம் கவிதைத் தொகுப்புகள்
படைப்பு பதிப்பகம் மூலமே வெளிவந்து பலரது கவனம் பெற்றது. இணையத்தில் படைப்பு உட்பட
பல தளங்களிலும் இவர் கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு பதிவாகிக் கொண்டிருக்கிறது.
சிற்றிதழ்களிலும் பேரிதழ்களிலும் இன்றும் எழுதி வருகிறார். செல்வன் கார்க்கி நினைவுப் பரிசு (த.மு.எ.க.ச) உட்பட பல
விருதுகள் பெற்றிருப்பதுடன் படைப்பின் உயரிய விருதான கவிச்சுடர் விருதும் பெற்றவர்
என்பது குறிப்பிடத்தக்கது.