பழுத்த இலையின் அடுத்த நொடி
நூல் பெயர் : பழுத்த இலையின் அடுத்த நொடி
(ஹைக்கூ நூல்)
ஆசிரியர் : குமார் சேகரன்
பதிப்பு : முதற்பதிப்பு 2020
பக்கங்கள் : 109
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : படைப்பு டிசைன் டீம்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ100
இயந்திரச் சுழலில் இயங்கும் இன்றைய அறிவியல் உலகில், சுருங்கிய வடிவில் கருத்தினைத் தெரிவிக்கும் புதுக்கவிதை வடிவையும் கடந்து, இன்னும் சுருக்கமாக கருத்துரைக்கும் குறுங்கவிதை வடிவம் தோன்றலானது. மூன்றடி வடிவக் கவிதையே குறுங்கவிதை அல்லது துளிப்பா என்றழைக்கப்படுகிறது. ஜப்பானிய இலக்கிய வடிவத் தாக்கமாக எழுந்ததாக இருந்தாலும், ஆதி மொழியான தமிழின் ஐங்குறுநூற்றிலும் இப்படிப்பட்ட மூன்றடிப் பாடல்கள் உள்ளன என்பது வரலாற்றின் சாட்சியங்கள். குறுங்கவிதையை துளிப்பா (ஐக்கூ), நகைத் துளிப்பா (சென்ரியு), இயைபுத் துளிப்பா (லிமரைக்கூ) என மூவகைப்படுத்தலாம். ஜப்பானிய மொழியில் தோன்றிய ஐக்கூ, 5-7-5 என்னும் அசையமைப்புடையதாக, ஜென் (Zen) தத்துவத்தை விளக்குவதற்கும், இயற்கையைப் போற்றுவதற்கும் பயன்பட்டது. தமிழிலக்கியத்தில் இவ்வடிவத்தில் அமைந்த கவிதைகள் சமூக விமர்சனத்திற்கும், சமூகக் கேடுகளைச் சாடுவதற்கும் பயன்படலாயின. துளிப்பாவானது படிமம், குறியீடு, தொன்மம், முரண், அங்கதம், விடுகதை, பழமொழி, வினாவிடை, உவமை, உருவகம் எனப் பல்வேறு உத்திமுறைகளில் அமைகிறது. எத்தனையோ உத்திமுறைகளிருப்பினும், தனக்கென இயல்பாக வரும் வாழ்வின் எல்லா நிலைகளையும் எதார்த்தங்களாக ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே ‘பழுத்த இலையின் அடுத்த நொடி’ தொகுப்பு. இதில் உள்ள ஒவ்வொரு துளிப்பாவும் வாசிப்பவரின் உள்ளுணர்வுக்குள் ஊடுருவி, இயற்கையின் நினைவலைகளை நகர்த்திச் செல்லும் என்பதே இத்தொகுப்பின் பலம்.
மலேசியா நாட்டின் சிலாங்கூர் மாநிலம் உள்ள ஜெரம் எனும் பட்டினத்தைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி குமார் சேகரன் அவர்களுக்கு இது, முதல் தொகுப்பு. இவர், சமூக வலைதளங்கள் மற்றும் இன்றைய ஹைக்கூ உலகில் தன் படைப்புகளால் நன்கு அறியப்பட்டவர். எளிமையாகவும் அதே நேரத்தில், வலிமையாகவும் மூன்று வரிகளில் சுருங்கச் சொல்லும் ஆற்றலை இயல்பாகவே பெற்றவர். மேலும் மித்ரா துளிப்பா விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.