நூல் பெயர் : முலையென்னும் தூரிகை
(கவிதை )
ஆசிரியர் : எஸ்தர் ராணி
பதிப்பு : முதற்பதிப்பு - 2022
பக்கங்கள் : 82
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : ரவி பேலட்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு பிரைவேட் லிமிடெட், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ 100
தனிமையின் மேல் ஒளிரும் பிறை நிலவுக்கு ஒளியூட்ட எந்த நட்சத்திரங்களும் தேவையில்லை. நிலவு என்பதே தனித்துவமாக ஒளிரும் தன்மை கொண்டதுதான். தனக்கான ஒளியைத் தானே தயாரித்துக் கொள்ளும் வல்லமை கொண்டது நிலவு. அதுபோலவே தனக்கான வலியைத் தானே தாங்கிக் கொள்ளும் சக்தி கொண்டது பெண்மையும் தாய்மையும். அனைத்தையும் துறப்பது துறவரம் எனில் அதனுடன் சேர்ந்து ஆடையை மறப்பதும் ஆசையைத் துறப்பதும் ஒரு வரம். அதுவே இருளில் இருக்கும் ஆன்மாவை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் ஒரு தவம். ஆக எந்த ஒளிவு மறைவும் இன்றி எழுதுவதே ஆகச்சிறந்த ஆத்மார்த்தம் என்கிறது இலக்கியமும். இப்படிப்பட்ட ஆழ்மனதின் ஆத்மார்த்தமான எழுத்தை எல்லாம் சமூகத்தின் உளிகொண்டு எதார்த்தமான சொற்களால் செதுக்கி அதை உணர்வுகளின் ஊடாக ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே 'முலையென்னும் தூரிகை' நூல். இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் ஆணுக்குப் பெண் அனைத்திலும் சமம் என உணர வைப்பதும், வாசிப்பவரின் இருள் மனதில் ஒரு வெளிப்படையான வெளிச்சப் பேரொளியை படரவிட்டுக் கொண்டிருக்கும் என்பதும் இத்தொகுப்பின் பலம்.
கோவையைப் பிறப்பிடமாகவும், சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி ‘எஸ்தர் ராணி' அவர்களுக்கு இது முதல் தொகுப்பு. இயன்முறை மருத்துவராக இருந்துகொண்டு பின்நவீனத்துவ இலக்கியத்திலும் பெண்ணியம் சார்ந்து எழுதுவதிலும் தனித்துவமாக அறியப்படுகிறார். இந்நூல் வருங்காலத்தில் அவருக்கு தனித்த அடையாளத்தைப் பெற்றுத் தரும். அதை வைத்து தனக்கென தனியிடத்தை இவ்விலக்கிய உலகில் தக்க வைத்துக் கொள்வார்.