நீந்தத் தெரியாத ஐயனார் குதிரை
நூல் பெயர் : நீந்தத் தெரியாத ஐயனார் குதிரை
(கவிதை)
ஆசிரியர் : வீ.கதிரவன்
பதிப்பு : முதற்பதிப்பு 2020
பக்கங்கள் : 73
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : ஆரூர் த.இலக்கியன்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ 80
இவ்வுலகமும் இப்பெருவாழ்வும் எல்லாவற்றையும் மிக எளிமையாகப் பார்க்கச் சொல்கிறது. ஆனால் மனம் எப்போதும் பிரமாண்டங்களை நோக்கியே இருக்கிறது. அதனால்தான் கண்கள் கடினத்தை நோக்கிக் காய் நகர்த்துகிறது. இருத்தலுக்கானதில் போர், போராட்டம் என எவ்வளவோ கடினம் இருப்பினும் ‘இல்லை’ என்பதில், இயற்கை எய்தியதென இயற்கையைக் குறிக்கும் எளிமை மட்டும்தானே இருக்கிறது. வாழ்வைப் புரிந்தவருக்கு எளிமை என்பது வரம். அப்படிப்பட்ட வரங்களை எல்லாம் வரிகளாக்கி, வாழ்வியலோடு சமூகத்தையும் கவிதைக்குள் கொண்டுவந்து காட்சிப்படுத்தியிருப்பதே ’நீந்தத் தெரியாத ஐயனார் குதிரை’ கவிதைத் தொகுப்பு. இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் எல்லோருக்கும் புரியும்வகையில் மிக எளிய நடையில் இருப்பதும் அது, யதார்த்தங்களை வாசிப்பவர் மனதில் விதைத்துவிட்டுப் போவதும் இத் தொகுப்பின் பலம்.
காரைக்கால் மாவட்டம், விழுதியூரைப் பிறப்பிடமாகவும், புதுச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி வீ.கதிரவன் அவர்களுக்கு இது, முதல் தொகுப்பு. இவரது கவிதைகள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகியிருக்கின்றன. மேலும் படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தையும், கவிச்சுடர் எனும் உயரிய விருதையும் பெற்றவர் மற்றும் படைப்பு பரிசுப் போட்டியில் கவிஞர் மு.மேத்தா அவர்களால் தேர்வு செய்யப்பட்டவர் இவர், என்பதும் குறிப்பிடத்தக்கது.