நூல் பெயர் :
கருவரை முதல் வகுப்பரை வரை (கட்டுரைகள்)
ஆசிரியர் :
செல்வ கதீஸ்வரன்
பதிப்பு :
முதற் பதிப்பு - 2024
பக்கங்கள் :
124
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 170
இவ்வுலகில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் மரபணு
சார்ந்து இருந்தாலும் அதன் பலம் மற்றும் பலவீனம் பெரும்பாலும் பெற்றோரால் உருவாக்கப்பட்ட
அனுபவங்கள் மூலம் மாற்றியமைக்கப்பட முடியும் என்பதே நிதர்சனம். காரணம், பெற்றோர்களே
குழந்தைகளின் சூழலை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறார்கள். மேலும் குடும்பம்,
உறவுகள், கலாச்சாரம், பண்பாடு, கற்க வேண்டிய கல்வி மற்றும் படிக்க வேண்டிய பள்ளி உட்பட
அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக, முடிவெடுக்கும் பொறுப்பாளராக பெற்றோர்களே இருக்கிறார்கள்.
அதன்பிறகு குழந்தைகளை பாதிக்கும் பிற காரணிகளை சரி செய்யவும், பயனளிக்கும் பாதைகளை
உருவாக்கித் தரவும், அறிவார்ந்த வளர்ச்சி, வெற்றிக்கான முயற்சி அதை பெறுவதற்கான பயிற்சி
என போதிக்கும் பொறுப்பில் பள்ளிகள் இருக்கின்றன. அன்பு ஒருபக்கம், கண்டிப்பு மறுபக்கம்
என பெற்றோர்களும் பள்ளிகளும் எதிரெதிர் திசையில் இருப்பதுபோல் தெரிந்தாலும் வாழ்க்கையில்
கல்வி என்று வரும்போது காந்தம் போல குழந்தைகள் ஈர்க்கபடுவார்கள் என்பதே எதார்த்தம்.
அப்படி குழந்தை வளர்ப்பு பற்றிய புரிதல் எல்லோரிடத்திலும் கொண்டுசெல்ல வேண்டிய நோக்கில்
சிறார் இலக்கியமாக உருவாக்கப்படிருப்பதே ‘கருவறை முதல் வகுப்பரை வரை’ எனும் நூல்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பக்தன்காடு என்னும் ஊரை பூர்வீகமாகவும், ஈத்தாமொழி என்னும் ஊரை வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி முனைவர் பொ. செல்வகதீஸ்வரன் அவர்களுக்கு இது இரண்டாவது நூல். இயற்பியலில் முதுகலை பட்டமும் (M.sc.,), கல்வியியலில் முதுகலை பட்டமும் (M.Ed.,), உளவியலில் முதுகலை பட்டமும் (M.sc.,) மற்றும் கல்வியியல் ஆராய்ச்சிக்காக முனைவர் (Ph.D) பட்டமும் பெற்றுள்ள இவர், தற்போது கணபதிபுரம் அன்ன விநாயகர் கல்வியியல் கல்லூரியில் கல்வி உளவியல் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். குமரி மாவட்டத்தின் பிரபல பட்டிமன்ற பேச்சாளரான இவர் தமிழ்நாடு முழுவதும் பல பட்டிமன்றங்களிலும், தனிச்சொற்பொழிவுகளையும் நிகழ்த்தியுள்ளார். நகைச்சுவை பேச்சுக்காக ‘இளைய கலைவாணர்’ என்ற பட்டத்தையும், ‘வார்த்தை சித்தர்’ என்ற பட்டத்தையும் மற்றும் ‘குமரி மாவட்ட சாதனையாளர் 2023’ என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார். மேலும் மாணவப் பருவத்தில் இருந்தே சன்.டிவியின் ‘அரட்டை அரங்கம்’ மற்றும் விஜய் டிவியின் ‘தமிழ் பேச்சு எங்கள் மூச்சு’ போன்ற தொலைக்காட்சி பேச்சரங்கங்களிலும் பங்கேற்று பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.