நூல் பெயர் : நூற்றாண்டின் இறுதிநாளும் முதல் நாளும்
நூல் வகைமை : கவிதைகள்
ஆசிரியர் : தொகுப்பு: பாலை நிலவன்
பதிப்பு : முதற்பதிப்பு - 2023
பக்கங்கள் : 170
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
விலை : ரூ .250
சிறு பத்திரிக்கையின் சகல லட்சணங்களோடும் வெளிவந்த ஓர் இதழ் நீட்சி. லட்சணம்
என்று சொல்லும் போது செய்நேர்த்தியும் அதன் ஒழுங்குகளுமென்று தவறாக புரிந்துவிடக்கூடாது. அப்படித்தான் இங்கே செயற்கையான செய் நேர்த்திக்கு
பலரும் மாடாய் உழைக்கிறார்கள் . எங்கெல்லாம் லட்சணம் இருக்கிறதோ அங்கெல்லாம் நிறுவன மனமொன்று
கல்லாப்பெட்டியை திறந்து திறந்து மூடுகிறது.
கலை அவலட்சணங்களின் ஆன்மாவை இசைக்கின்றது. லட்சணத்திற்கு எதிரான அவலட்சண ரூபங்களின்
மீது அக்கறைப்பட்டு மனதின் ஆழங்களில் உள்ள பாஷையின் பல்வேறு மொழி வடிவங்களை கண்டடையும்
போது லட்சணம் அழகா அல்லது அவலட்சணம் தான் அழகா என்றில்லாமல் இந்த மனித வாழ்வின் சகல
பரிபூரண அழுக்குகள் அவமானங்கள் நன்மை தீமைகள் காரண காரியங்கள் நமக்கு திறந்து காட்டும்
கலை ரூபங்கள் தான் மகத்துவ கணம் நோக்கி நம்மை வழிநடத்தவல்லது. நீட்சி முதல் இதழில்
பங்குபெற்ற கவிஞர்களின் இந்த வரிசையே ஓர் இதழின் ஆன்மா என்னவாக இருந்தது என்பதற்கான சான்றை வழங்குகிறது.