நூல் பெயர் :
கடைசி மனிதன் (சிறுகதைகள்)
ஆசிரியர் :
ப. தனஞ்செயன்
பதிப்பு :
முதற் பதிப்பு - 2024
பக்கங்கள் :
98
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 140
பெரும்பாலான கதைகள் எழுத்தாளரின் கற்பனையையும் அனுபவங்களையும்
கடந்து ஒரு நினைவாற்றலுடன் தொடங்குகிறது. ஏதோ ஒரு நபர், ஏதோ ஒரு பிரச்சனை, ஏதோ ஒரு பதற்றம், ஏதோ ஒரு பயம்,
ஏதோ ஒரு மோதல்கள் என ஏதோ ஒன்று உங்களுடன்
எதிரொலித்து உங்கள் மனதை சென்றடையும்போது, அது ஒரு கதையாக வளர்ந்து எழுத்தின் வழியாக
வெளியே வரும். அவ்வாறு வரும் கதையில் நல்ல கதையம்சமும், அது ஏதாவது ஒரு நிகழ்ச்சியை
மட்டுமே விவரிப்பதாகவும், ஒரு மூச்சில் படித்து முடிக்கக்கூடியதாகவும், அது தனக்கென
ஒரு தனிப்பண்பைக் கொண்டுள்ளதாகவும், படிப்போர்
மனத்தில் ஆழப் பதிந்து சிந்தனையும் கிளர்ச்சியும் திருப்தியும் ஏற்படுத்த வல்லதாகவும்,
ஆரம்பம் முதல் முடிவு வரையில் தொய்வின்றி ஒரே சீராகச் செல்ல கூடியதாகவும் இருக்குமெனில்
அதுவே சிறந்த கதை. கதையின் மையமான அம்சமே அதன் கரு. காரணம், கதையின் உருவத்தையும்,
நடையையும் நிர்ணயிக்கக்கூடியதும், கதையின் சிறப்புக்கு மூலகாரணமாக இருப்பதும் அதன்
கருதான். அப்படிபட்ட மைய கருக்களுக்கு உருவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருப்பதே ‘கடைசி
மனிதன்’ நூல்.
புதுச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி ‘ப.தனஞ்ஜெயன்’ அவர்களுக்கு இது எட்டாம் நூல். இவர் இதற்கு முன்பு படைப்பு பதிப்பகம் மூலம் ஆறு நூல்களை வெளியிட்டு இருக்கிறார். அது பலராலும் பாராட்டப்பட்டுக் கொண்டிருப்பதுடன் புதுச்சேரி மாநில அரசு சார்பாக வழங்கப்பட்ட இலக்கிய விருதும் பெற்று இருக்கிறது. இவரது பல படைப்புகள் பல முன்னணி பத்திரிக்கைகளில் பிரசுரமாகி வருகின்றன. படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தை இரண்டு முறை பெற்றவர். மேலும் படைப்பின் உயரிய விருதான கவிச்சுடர் விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.