நீர்ப்பறவையின் எதிரலைகள்.. குமரேசன் கிருஷ்ணன்
கவிதைகளின் வகைமையை வைத்தும் அதன் வடிவத்தை வைத்தும் வரலாற்றை கணக்கிடும் அளவுக்கு இலக்கியம் ஒரு ஆராய்ச்சிக்கான அனைத்து தகுதியையும் பெற்று இருக்கிறது. அப்படி தோன்றிய பல வடிவங்களும் வகைமைகளும், காலப் போக்கில் காணாமல் போய்விட்டன இருப்பினும் ஒருசில வகைமைகள் இன்னும் மக்கள் மனதிலிருந்தும் அவர்களது மொழிநடையிலிருந்தும் ஆதிச்சரித்திரத்தின் நீட்சியாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதில் ஜப்பானிய ஹைக்கூ எனப்படும் குறும்பாக்களும் ஒன்று. மலையளவு செய்தியை கடுகளவு வார்த்தைகளால் கவிதையில் சொல்லி முடிப்பதால் என்னவோ இன்றளவும் உலகளவில் இலக்கியத்தில் தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. அப்படிப்பட்ட குறும்பாக்களால் பழைய குளத்தில் புதிய பாஷோவின் நினைவலைகளால் உயிரூட்டப்பட்டு இருப்பதே "நீர்ப்பறவையின் எதிரலைகள்". மண் சார்ந்தும், இயற்கை சார்ந்தும், மனிதர்கள் அல்லாத பிற உயிரனங்களின் வாழ்வியல் சார்ந்தும் என ஹைக்கூவின் நெறி பிறழாமல் எழுதியிருப்பது இத்தொகுப்பின் பலம்.
சங்கரன்கோவிலை வசிப்பிடமாகக் கொண்டு, மின்சார வாரியத்தில் பணிபுரியும் படைப்பாளி "குமரேசன் கிருஷ்ணன்" அவர்களுக்கு இது இரண்டாம் தொகுப்பு. இவரது முதல் தொகுப்பான "நிசப்தங்களின் நாட்குறிப்பு" படைப்பு பதிப்பகம் மூலமே வெளியிடப்பட்டு பல விருதுகளைப் பெற்றுத் தந்தது இவருக்கு. மேலும் படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் உயரிய விருதான கவிச்சுடர் விருதும் மற்றும் படைப்புக் குழுமம் நடத்திய பரிசுப்போட்டியில் கவிஞர் வண்ணதாசன் அவர்களால் தேர்வு செய்யப்பட்டு பரிசும் பெற்றவர்.
நூலாசிரியர்
குமரேசன் கிருஷ்ணன்
நூல் வகைமை
ஹைக்கூ கவிதை
நூல் விலை
100
வெளியீடு
படைப்பு பதிப்பகம்
அட்டைப்படம்
ரவி பேலட்