நூல் பெயர் : அக்கை
(கவிதை)
ஆசிரியர் : அழ.இரஜினிகாந்தன்
பதிப்பு : முதற்பதிப்பு 2020
பக்கங்கள் : 160
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : படைப்பு டிசைன் டீம்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ120
உறவுகள் இன்னும் உயிர்ப்புடன் இருப்பது கிராமங்களில்தான். எவ்வளவு தூரத்து உறவாக இருந்தாலும் உரிமையுடன் வந்து உதவி செய்வதும், தோளோடு தோள்கொடுத்து நிற்பதும் கிராமங்களில்தான் நிகழ்கின்றன. இன்றும், அன்பின் அடையாளங்களை அடைகாக்கும் இடமாகவே இருக்கின்றன கிராமங்கள். உண்மையான உறவை, நேர்மையான அன்பை, நம்பிக்கையான வாழ்வைக் கொண்டிருக்கும், எந்தப் போலித்தனமும் இல்லாத உண்மையான மனிதர்களை இப்போதும் பிரசவித்துக்கொண்டே இருக்கின்றன கிராமங்கள். ஒப்பனையை ஒருபோதும் விரும்பாத, பாசாங்கில்லாத இயற்கையோடு இயற்கையாய் இயைந்து வாழும் வாழ்வைப் பெற்றிருக்கும் கிராமங்களையும் அதன்போக்கிலேயே வாழும் அந்தக் கிராம மனிதர்களையும் கவிதையில் கொண்டுவந்ததுடன் அவர்களின் அகவாழ்வு, புறவாழ்வு மற்றும் சமூக வாழ்வு என எல்லா நிலைகளையும் எதார்த்தங்களாக ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே ’அக்கை’ தொகுப்பு. இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் வாசிப்பவரின் உள்ளுணர்வுக்குள் ஊடுருவி, தாம் வாழ்ந்த அல்லது தம் முன்னோர்கள் வாழ்ந்த ஏதோவொரு கிராமத்திற்குள் நினைவலைகளை நகர்த்திச்செல்லும் என்பதே இத்தொகுப்பின் பலம்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தாலுகா, சலுப்பை கிராமத்தைப் பிறப்பிடமாகவும், சென்னையை வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி அழ.இரஜினிகாந்தன் அவர்களுக்கு இது இரண்டாம் தொகுப்பு. இவர், சமூக வலைதளங்கள் மற்றும் பிரபல பத்திரிகைகளில் தன் படைப்புகளால் நன்கு அறியப்பட்டவர். படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தைப் பெற்றவர். மேலும் படைப்பு குழுமம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.