நூல் பெயர் : இயல்வாகைப் பூக்கள் (நாவல்)
ஆசிரியர் :
நித்யா ராமதாஸ்
பதிப்பு :
முதற்பதிப்பு - 2024
பக்கங்கள் :
156
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 220
இத்தாலிய
மொழியில் உள்ள NOVELLA என்பதன் பொருள் சுருக்கமே நாவல் என்றானது. இதன் கூர்மையான கதைக்களம் கொண்ட பாதை, இதன் பயணத்தை
உலகம் முழுக்க பரவச் செய்தது. அந்த பரவலின் நீட்சியாக தமிழ் இலக்கிய மரபில் காவியங்கள்,
இதிகாசங்கள், புராணங்கள் வைத்திருந்த இடத்தை நாவல் தக்க வைத்துக்கொண்டு தன்னை செழுமைப்
படுத்திக் கொண்டது. இதிலிருக்கும் உரைநடை புனைகதையின் கலையம்சம், குறிப்பிட்ட மனித
அல்லது பாத்திர அனுபவங்களைப் பற்றிய ஒரு கதையை கணிசமான நீளத்திற்குச் சொல்ல இடமளிக்கிறது.
உரைநடை மற்றும் நீளம், அத்துடன் கற்பனை மற்றும் கருப்பொருள் ஆகியவை சேரும்போது ஒரு
கலைப் படைப்பை மிகத் தெளிவாக வரையறுக்கும் சிறப்பியல்பு கூறுகள் கொண்ட இலக்கிய வடிவமாக
நாவல் மாறி விடுகிறது. காவியக் கவிதைகளைப் போலன்றி, இது வசனத்தை விட உரைநடையைப் பயன்படுத்தி
அதன் கதையைச் சொல்வதால் எல்லோரும் புரிந்து கொள்ளும் எளிய மொழியில் இருந்து விடுகிறது.
அப்படிப்பட்ட எளிமையும் புதுமையும் நிறைந்த நாவலே ‘இயல்வாகைப் பூக்கள்’ எனும் நூல்.
கன்னியாகுமரி மாவட்டம் பைங்குளம் கிராமத்தைப் பிறப்பிடமாகவும்,
சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி நித்யா ராமதாஸ் அவர்களுக்கு இது முதல் நூல்.
அரசுப் பணியாளரான இவர் ஒரு கதை சொல்லியாகவும் இருக்கிறார். கடந்த பத்து ஆண்டுகளாக
‘நித்யாஸ் எப்.எம்’ எனும் ‘வாட்ஸ்ஆப்’
குழுவின் மூலம் இரண்டு நிமிட ஆடியோ கதைகள் சொல்லிவருகிறார். இவரது
இருநூறுக்கும் மேற்பட்ட கதைகள் www.nithyasfm.com எனும் இணைய தளத்தில் பகிரப்பட்டுள்ளன.
அன்றாட நிகழ்வுகளின் தாக்கத்தில் எழுதப்பட்டுள்ள இவரது பெரும்பாலான கதைகள் மனிதர்களையும்,
மனித மனங்களையும், உணர்வுகளையும் மையமாகக் கொண்டவை. இந்த நூலை வாசிப்பதோடு மட்டுமல்லாது,
இவரது கதைகளை ‘நித்யாஸ் எப். எம். யுடியூப்’ சானலிலும்,
ஸ்பாட்டிபை பாட்காஸ்ட்டிலும் கேட்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.