நட்சத்திரப் பிச்சைக்காரன்
நூல் பெயர் : நட்சத்திரப் பிச்சைக்காரன்
(கவிதை )
ஆசிரியர் : ஜெ. பிரான்சிஸ் கிருபா
பதிப்பு : முதற்பதிப்பு - 2021
பக்கங்கள் : 180
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : ரவிபேலட்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு பிரைவேட் லிமிடட், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ 250
தனக்கான வானத்தைத் தானே வரைந்து கொள்ளும் ஆற்றலுடைய கவிதைப் பறவை ஜெ.பிரான்சிஸ் கிருபா அவர்கள். தன்னியல்பு மாறாமல் படைப்புகளைத் தந்து தனிப்பெரும் ஆழியாக வாசக அலைகளை உருவாக்கிக் கொண்ட மகா சமுத்திரம் இவர். வாழ்வியலின் தூரத்தை துயரத்தால் அளவீடு செய்து அதை எழுத்துகளில் ஏற்றிப் பார்த்த எதார்த்தவாதி. தன்னைக் கிள்ளி எறியும்போதோ, பறிக்கும்போதோ, இன்பத்திலோ துன்பத்திலோ வெவ்வேறு மணம் தராமல் ஒரே மாதிரி மணம் வீசும் புன்னகை பூக்கும் மலர் இவர். தன்னையே ஒரு கவிதையாக கர்த்தரிடம் ஒப்புக்கொடுத்து விட்டவர். கடைசி காலமெனத் தெரியாமல் இந்நூல் விஷயமாக ஒவ்வொரு முறை அவரிடம் உரையாடும்போதும் 'காலத்தின் கைகளில் எவ்வாறு கவிதையை ஒப்படைப்பது' என அவர் கலங்கியது இன்று எங்கள் கண்களில் கண்ணீராக வழிந்து கொண்டிருக்கிறது. கடைசியாக அவர் கைப்பட எழுதிக் கொடுத்ததெல்லாம் அவர் இருக்கும்போதே ஒவ்வொன்றாகச் சரிபார்க்கப்பட்டு முறைப்படுத்தி இறுதிவடிவம் கொடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருப்பதே 'நட்சத்திரப் பிச்சைக்காரன்' நூல். இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் தனக்கென பின்னப்பட்ட பிரத்யேகமான பாணியில் படைப்பாளி கிருபா அவர்கள் எழுதி இருப்பதே இந்நூலின் ஆகப்பெரும் பலம்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், மூன்றடைப்பு, பத்தினிப்பாறை கிராமத்தைப் பூர்வீகமாகவும், சென்னையை வாழ்விடமாகவும், கொண்ட படைப்பாளி ஜெ.பிரான்சிஸ் கிருபா அவர்களுக்கு இது, ஒன்பதாம் நூல். இவரது கட்டுரைகள் மற்றும் கவிதைகள் பல பத்திரிகைகள், இதழ்களில் பிரசுரமாகி இருக்கின்றன. திரைப்படத்திலும் ஏராளமான பாடல்களை எழுதி இருக்கிறார். உலகமே கொண்டாடப்பட்ட கன்னி போன்ற புதினங்கள்/நாவல்கள் இன்னும் ஒன்றிரண்டு இவரிடமிருந்து வந்திருக்க கூடாதா என வாசகர்கள் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். நாம் அவரைத் தவற விட்டது போல காலமும் அதைத் தவற விட்டிருக்கலாம். சுந்தர ராமசாமி விருது, சுஜாதா விருது, மீரா விருது, ஆனந்த விகடன் விருது எனப் பல விருதுகளையும் பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.