நூல் பெயர் : பணத்தால் அடித்தால் வலிக்காது (சிறுகதைகள்)
ஆசிரியர் :
சாஸ்தா
பதிப்பு :
முதற்பதிப்பு - 2024
பக்கங்கள் :
164
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை : ரூ 230
பொதுவாக
சிறுகதைகள், பெண்ணியம், நவீனம், சர்ரியலிஸம், புனைவு, மீபுனைவு, வாய்மொழி மரபு மற்றும்
விஞ்ஞானச் சிறுகதைகள் என்று பல பெயர்களில், பல அடையாளங்களில் எழுதப்பட்டாலும் எல்லாக்
கதைகளுமே வாழ்வைத்தான் எழுதுகின்றன. வாழ்வை எழுதாத சிறுகதைகள் எவர் வாழ்விலும் தாக்கத்தை
ஏற்படுத்தாது என்பதே அதன் சூட்சமம். கடந்த காலங்களைவிட இக்காலத்தில்தான் சிறுகதைக்கானக்
கூறுகள், வடிவம், மொழி, நடை, உள்ளடக்ககம், எல்லை, கதை நகர்த்தல், கதை மாந்தர்களின்
போக்கு, போன்ற பல்வேறு வகையான நிலைகள் குறித்த தெளிவு ஏற்பட்டுள்ளது. புதியவகை முயற்சிகள்
இப்போது போற்றப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக எல்லோரும் எல்லாமும் எப்போதும் சமம்
என்கிற எதார்த்தத்தை உண்மையை இலக்கியம் வாயிலாக உரக்கச்சொல்ல தொடங்கி விட்டனர். அதன்
பலனாக, சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களுடைய வாழ்க்கையும், பெண்களுடைய வாழ்க்கையும்
அக்கறையுடன் எழுதப்படுகின்றன. இதுவரை சமூகம் அறியாத பல வாழ்க்கை முறைகள் இப்போதுதான்
கதைகளாகின்றன. மேலும் சமூக சீர்கேடுகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் துல்லியமாக அளவீடு
செய்யும் சிறுகதைகளை காலத்தின் கண்ணாடியாக கட்டமைக்கின்றனர். அப்படிப்பட்ட சிறுகதைகளை
எல்லாம் ஒன்று திரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே ‘பணத்தால் அடித்தால் வலிக்காது’ நூல்.
தூத்துக்குடியைப் பிறப்பிடமாகவும், கும்பகோணத்தை இலக்கிய ஆர்வம் வளர்த்த இடமாகவும், சென்னையை வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி சாஸ்தா என்கிற சாஸ்தா செல்வராஜ் அவர்களுக்கு இது முதல் நூல். பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற பின் இடமாற்றம் போன்ற பல புற காரணிகளால் எழுதுவது குறைந்து போனதாக அறியப்படுகிறது. இந்த நூல் தாமதமாக வெளி வருவதற்கான காரணமும் அதுதான். பிரசவிக்காத கருக்களோடு உலாவந்து கொண்டிருக்கிற இவர், தற்போது வங்கிப் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் இனி பல நூல்களை வெளியிட திட்டமிட்டிருக்கிறார். ஆனந்த விகடனின் ‘சொல்வனம்’, ‘கவிதை உறவு’ போன்ற சில பத்திரிகைகளில் கவிதைகள் எழுதி பிரசுரம் ஆகி இருந்தாலும் சிறுகதைகள் எழுதுவதிலேயே நாட்டம் அதிகம் இவருக்கு. 1988 முதல் 1993 வரையான காலகட்டங்களில் இவருக்குப் பிடித்த ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமாரன் போன்ற எழுத்தாளர்களை வங்கியின் கிளைக்கு சிறப்பு பேச்சாளர்களாக அழைத்து, நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கிறார். மேலும் திரைப்பட இயக்குநர் பாலு மகேந்திரா அவர்கள், சன்- டிவியில் “கதை நேரம்” தொலைக்காட்சி தொடர் வெளியிட்டுக்கொண்டிருந்த சமயம், இத் தொகுப்பில் உள்ள சில கதைகளை அவரிடம் கொடுத்திருக்கிறார். அவற்றில் “கொல்லாமல் ஒரு கொலை” கதையை என்னால் ‘விஷுவலைஸ் பண்ண முடிகிறது’ என்று பாலுமகேந்திரா அவர்களால் பாராட்டப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.