காலம் என்பது ஒரு
கற்பிதம். கற்பிதம் என்பது நாம் காணும் காட்சி. காட்சி என்பது ஒளி. இயற்பியலில் ஒளி
ஒரு துகள்; இயற்கையில் அது ஒரு
பகல் அல்லது வெளிச்சம். அண்டம், நேரம்
இரண்டையும் இணைக்கும் காரணியாக ஒளியின் வேகம் இருக்கும் என்பது விஞ்ஞானம். அறிவு,
சிந்திக்கும்
திறன் இரண்டையும் இணைக்கும் காரணியாக மூளையின் வேகம் இருக்கும் என்பது ஞானம். அவரவர்
வயதுக்கேற்ப சிந்தனை மாறுபடும் அவரவர் சிந்தனைக்கேற்ப இந்த ஞானமும் மாறுபடும். இலக்கியம்
என்பதே ஒருவகை அறிவுதான் அதில் சுருங்கச் சொல்லி நிறைய செய்திகளைச் சொல்லும் திறனும்
ஒருவகை ஞானம்தான். அந்த ஞானமும் எழுத்தில் வருவது ஒருவகை தனித்துவம்தான். அப்படிப்பட்ட தனித்துவ வரிகளை எல்லாம் ஒன்றுதிரட்டி
உருவாக்கப்பட்டிருப்பதே 'சுகிமி'
நூல்.
இதில் உள்ள ஒவ்வொரு குறுங்கவிதையும் வாசிப்பவரின் உணர்வுக்குள் ஊடுருவி மனதில் நினைவலைகளைப்
போல நீந்திச் செல்லும் என்பதே இத்தொகுப்பின் பலம்.
திருக்குவளையைப் பூர்வீகமாகவும், தஞ்சையை வாழ்விடமாகவும், பொள்ளாச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட, தமிழ்நாடு அரசு நீர்வள ஆதாரத் துறையில், உதவி செயற்பொறியாளராகப் பணியாற்றும் படைப்பாளி கோ.லீலா அவர்களுக்கு இது, ஐந்தாவது நூல். இவரது கட்டுரைகள் மற்றும் கவிதைகள் பல பிரபல பத்திரிகைகள், இதழ்களில் பிரசுரமாகி இருக்கின்றன. மேலும் படைப்பு குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தையும், படைப்பின் உயரிய விருதான இலக்கியச்சுடர் விருதையும் பெற்றவர். படைப்பு பதிப்பகம் வெளியிட்ட இவரது முதல் நூலான ‘மறைநீர்’, எண்ணற்ற விருதுகளைப் பெற்றிருப்பதுடன், கடந்த இருபது ஆண்டுகளில் வெளிவந்த சிறந்த பத்து நூல்களில் ஒன்றாக விகடன் தேர்வு செய்து பெருமைப்படுத்தியது. மேலும் மறைநீர் நூலில் கட்டுரை எண் 4, பி.ஏ. தமிழ்ப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. படைப்பு பதிப்பகம் வெளியிட்ட , 'ஹைக்கூ தூண்டிலில் ஜென்' எனும் இவரது இரண்டாவது நூலில், ஹைக்கூ கவிதைகள் மீதான ஆய்வுக் கட்டுரையை எழுதியதன் மூலம் தமிழ்நாட்டில் ஹைக்கூவை ஆய்வு செய்த நான்காவது பெண் என வரிசைப்படுத்தப்படுகிறார்.