நூல் பெயர் : பணித்துளியை மறப்பதில்லை இலை
நூல் வகைமை : கவிதைகள்
ஆசிரியர் :
ஆனந்தராஜ்
பதிப்பு :
முதற் பதிப்பு - 2025
பக்கங்கள் :
88
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 120
சிந்திக்கும்
திறன் மூளையிடம் இருந்தாலும் இறுதி முடிவெடுக்கும் அல்லது சம்மதம் தெரிவிக்கும் இடம்
நம் மனம்தான். உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அல்லது உணரும்
திறன் மூளையிடம் இருந்தாலும் உணர்வுகளை உருவாக்கும் இடம் மனதிடமே இருக்கிறது.
அதனால்தான் சில நேரம் நாம் உணர்ச்சிவசம் அடையும்போது அதை சாந்தப்படுத்த நல்ல மனம் தேவைப்படுகிறது. மனதைப் பெற மூளை தேவை, ஆனால் மனம் மூளைக்குள் இல்லை
என்பதே அதன் தனித்துவம்; அந்த மனம் என்பது சொல்லார்ந்த சிந்தனை, இன்ப துன்ப உணர்வுகள்,
ஆசை, கோபம், இரக்கம், கவனம், தெளிவு, செறிவு, நுண்ணறிவு இன்னும் பலவற்றை உள்ளடக்கிய
ஒன்றுக்கும் சமூகம், பன்பாடு மற்றும் கலாச்சாரம் உட்பட்ட உலகத்திற்கும் இடையிலான உறவு.
உண்மையில் அனுபவம் என்பது வேறொன்றுமில்லை பன்பட்ட மனமேயாகும். மனச்செயல்களினால் உணரப்படும் வாழ்வின் அனுபவங்களே
நிகழ்வுகளாகிறது. அது எழுத்தாகும்போது இலக்கியமாகிறது. சில தருணங்களில், பலரது மனச்செயல்களில்
மாற்றங்களை நிகழ்த்துகின்ற கருவியாகவும் இலக்கியங்கள் இருக்கின்றன. அப்படி அடிமனதின்
ஆழத்திலிருந்து உதித்த சொற்களை கவிதைகளாக ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே “பனித்துளியை
மறப்பதில்லை இலை” நூல்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியைப் பிறப்பிடமாகவும், சென்னையை வாழ்விடமாகவும்
கொண்ட படைப்பாளி ஆனந்தராஜ் அவர்களுக்கு இது நான்காவது தொகுப்பு. ஆங்கில இலக்கியத்தில்
முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், தமிழ்ச் சிற்றிதழ்களில் 1991-ஆம் வருடத்திலிருந்தே
எழுதி வருகிறார். கவிதைகள், மொழிபெயர்ப்புகள் என பல்வேறு வகையான இவரது படைப்புகள் பல
இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. தற்போது சென்னையில்
பேராசிரியராகப் பணிபுரிகிறார். மேலும் மொழிபெயர்ப்பு, விளம்பரத்துறை, கைரேகை சாஸ்திரம்
ஆகியவற்றில் மிகுந்த ஆர்வமுடையவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.