நூல் பெயர் : நீளிடைக் கங்குல்
(கட்டுரைகள் )
ஆசிரியர் : ராஜி வாஞ்சி
பதிப்பு : முதற்பதிப்பு 2020
பக்கங்கள் : 84
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : ரவிபேலட்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ100
ஆதியில், கலையும் தொழிலும் வீரத்தை மையமாக வைத்துப் படர்ந்தன என்றால், இலக்கியமும் எழுத்தும் அறிவைச் சார்ந்து மலர்ந்தன என்பதில் இவ்வுலகத்திற்கு பெருவியப்பைத் தந்தது தமிழ் மொழி. வாழ்க்கையும் வீரமும் பிரியாமல் ஒன்றி இணைந்திருந்த காலத்தில்கூட வாழ்க்கை வகைகளிலெல்லாம் இலக்கிய உணர்வு புகுந்து விளையாடும் அளவுக்கு இலக்கியங்கள் நூல்களாக உருவாயின. அக்கால மனிதர்களுக்கு வீரமும் குலத்தொழில் மட்டுமே லட்சியக்கனவோடு நின்றுவிடவில்லை. இவர்களுடைய அணிகளும் ஆடைகளும், விருந்தும் விழாவும், கதையாகவும் கவிதையாகவும், சங்க இலக்கியப் பாடல்களாகவும் வாழ்வின் உணர்வோடு ஒட்டியே வளர்ந்தன. வீரதீர நிகழ்ச்சிகளில்கூட இந்தக் கலைநயமிக்க இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு அதிக மதிப்பு அளிக்கப்பட்டது. அதன் பயனாக, வாழ்ந்த மக்களைப் பற்றியும் அவர்களின் வாழ்வியல் முறைகளைப் பற்றியும் பல இலக்கிய நூல்கள் தோன்றின. சாமானிய மனிதனால் செய்யமுடியாத வீரச் செயல்களை, அற்புதங்களை எல்லாம் இலக்கியம் இலகுவாக செய்தது. இன்று நம்மிடையே மன்னர்களைப் பற்றியும், வீரர்களைப் பற்றியும், புலவர்களைப் பற்றியும், அக்கால மக்களைப் பற்றியும் அவர்களுடன் பின்னிப் பிணைந்திருந்த சமூக, கலாச்சாரம் பற்றியும் எடுத்துச் சொல்லவும், எது வரலாற்று உண்மை, எது கற்பனைக் கதை என்று வேறு பிரித்துப் பார்க்கவும் சங்க இலக்கியமே சாட்சியானது. அப்படிப்பட்ட சங்க இலக்கியத்தில், அறக் கருத்துகளையும் வாழ்வியல் விழுமியங்களையும் உள்ளடக்கிய தொகுப்பே ’நீளிடை கங்குல்’ நூல். உணர்வுகள் பேசும் சங்க இலக்கியப் பொதிவுகள் சாமானியருக்கும் எட்டும்வகையில் எளிமைப்படுத்திச் சொல்லியிருப்பதே இந்நூலின் பலம்.
தமிழகத்தின் புதுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரை வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி ராஜி வாஞ்சி அவர்களுக்கு இது, முதல் நூல். இவர், இன்றைய இலக்கிய உலகிலும், பத்திரிகை மற்றும் இதழ்களிலும் தன் படைப்புகளால் நன்கு அறியப்பட்டவர். மேலும் ஹூஸ்டன் மாநகரின் முதல் தமிழ்ச் சங்கமான பாரதி கலை மன்றத்தின் இலக்கிய இயக்குநராகவும், தமிழ்ச்சாரல் இதழின் ஆசிரியப் பொறுப்பிலும் இருக்கிறார். இவர் எழுதிய ஹைக்கூ ஒன்று சிவகாசி அய்ய நாடார்-ஜானகிஅம்மாள் கல்லூரியில் பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது