அப்பத்தாவும் ஆண்ட்ராய்டு போனும்
நூல் பெயர் : அப்பத்தாவும் ஆண்ட்ராய்டு போனும்
(சிறுகதை)
ஆசிரியர் : அ.முத்துவிஜயன்
பதிப்பு : முதற்பதிப்பு - 2021
பக்கங்கள் : 124
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : படைப்பு டிசைன் டீம்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு பிரைவேட் லிமிடட், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ 120
நம் அப்பாக்களைப் பெற்றெடுத்த அம்மாக்களான அப்பத்தாக்களே நம் தமிழ்ச் சமூகத்தின் ஆகப்பெரும் கதைச் சொல்லிகள். நம் பால்யத்தின் பயணம் யாவிலும் அப்பத்தாக்களின் சுவடுகளே கதைகளின் வழி காலத்தையும் ஞானத்தையும் ஆரத்தழுவி இருக்கும். நம் அனுபவத்தின் ஆணிவேர் எங்கிருந்து தொடங்கி இருக்கும் என்று ஆராய்ந்து பார்த்தால் அது அப்பத்தாக்களின் அரவணைப்பிலும் அந்த அரவணைப்பின் கதகதப்பிலும் அவர்கள் சொன்ன கதைகளிலும் என்றுதான் விடை வரும். இப்படிப்பட்ட அன்பின் அடையாளமான உறவுகளை எல்லாம் வாழ்வின் கதை மாந்தர்களாக மாற்றி, அதைச் சூழலின் தன்மைக்கேற்ப காட்சிப்படுத்திப் பார்க்கும் சிறுகதைகளாக ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே ‘அப்பத்தாவும் ஆண்ட்ராய்டு போனும்’ தொகுப்பு. இதில் உள்ள ஒவ்வொரு கதையும், வாசிப்பவரை தாமே கதாபாத்திரமாக இருப்பதுபோல உணர வைப்பதும், காட்சிக்கேற்றவாறு அந்தந்தச் சூழலை அசைபோட வைப்பதும் இத்தொகுப்பின் பலம்.
மதுரையைப் பிறப்பிடமாகவும் கல்பாக்கத்தை வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி அ.முத்துவிஜயன் அவர்களுக்கு இது, ஏழாவது தொகுப்பு. இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான 'கீரக்காரம்மா' படைப்பு பதிப்பகம் மூலமே வெளிவந்து பலரது கவனம் பெற்றது. இணையத்தில் படைப்பு உட்பட பல தளங்களிலும் இவரது கதைகள் தேர்வு செய்யப்படு பதிவாகிக் கொண்டிருக்கின்றன. படைப்பு குழுமத்தில் இவர் பதிவிடும் சிறுகதைகளைச் சுடச்சுட வாசிக்க ஒரு வாசகர் கூட்டமே காத்திருக்கும். மேலும் படைப்பு குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தை கவிதைக்காகவும் சிறுகதைக்காகவும் இருமுறை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.