இந்த மாய உலகத்தில் மனித சமூகத்தின் உறவு என்பதே மௌனத்தைக் கலைக்கும் சொற்கள் போன்றதாகி விட்டது. உறவுகளோடு மனிதன் இருந்தவரை எல்லா இதயங்களிலும் அன்பெனும் பூ பூத்தது. உறவுகளை விட்டு மனிதன் பிரிந்த பின்பு அருகருகே இருப்பதுபோல் தெரிந்தாலும், ஈரம் உலர்ந்த உதடுகள்போல ஆகிவிட்டது வாழ்வு. உறவுகளைப் பார்க்கும் நமது பார்வை அனைத்தும் அதனை விட்டு விலகி வேறொரு கோணத்தில் செல்லும்போதுதான், உறவுகளின் புரிதலில் இருந்து பிரிதலுக்குள் தள்ளப்படுகிறோம். உதாரணமாக, நம் பார்வைக்கு வெறும் ஓடு தெரியும். ஆனால், தன்னையே தன் கூட்டுக்குள் சுருக்கிக் கொள்ளும் நத்தைக்கு அதுவே வீடு. இப்படிப்பட்ட உறவு சார்ந்த வாழ்வையும், வாழ்வியலையும், மனித சமூகத்தையும், பால்ய கால நினைவுகளையும் கவிதைகளாக ஒன்று திரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே ’நேற்றே வாழ்ந்திருக்க வேண்டும்’ எனும் இந்த நூல். இந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கவிதையும் உறவுகளின் உன்னதங்களை பற்றி அமைந்திருப்பது, அவற்றைப் படிக்கும் எல்லோராலும் எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இருப்பதே இந்நூலில் பெரும் பலம்.
சேலம் மாவட்டம், செந்தாரப்பட்டியைப்
பிறப்பிடமாகவும், கரூரை வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி இரா.செந்தில்குமார், ஆங்கில ஆசிரியராக
பணியாற்றி வருகிறார். இது இவரது முதல் நூல். இவரின் கவிதைகள் பிரபலமான பல பத்திரிகைகளிலும்
இதழ்களிலும் பிரசுரமாகி இருக்கின்றன. மேலும், படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் ’மாதாந்திர சிறந்த
படைப்பாளி’ என்ற தனித்துவமான அங்கீகாரத்தைப் பெற்றவர். படைப்புக் குழுமத்தின் அனைத்து
முன்னெடுப்புகளிலும் தனது பின்னணிக் குரலால் பங்களிப்புசெய்தன் மூலம், ’தொடர் பங்களிப்பாளர்
விருதை ஒவ்வோர் ஆண்டும் இவர் பெற்றுவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.