நீண்டு கிடக்கும் இந்தத் தமிழ் இலக்கிய நிலப்பரப்பில் கவிதை பயிர் செய்வதென்பது பிரியங்களின் பிரயத்தனம். வடிவங்களாகச் சூழ்ந்து நிற்கும் இந்த வாழ்வை இலகுவான அர்த்தங்களையே ஆயுதமாகக் கொண்டு அறுவடை செய்யப்பட்டு இருப்பதே இந்த "அசோகவனம் செல்லும் கடைசி ரயில்". எல்லாக் காலகட்டத்திலும் பெண்மொழியை முன்மொழியும்போது அது எல்லோராலும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது விமர்சனமாகவோ அல்லது விமரிசையாகவோ. படைப்பாளி என்று வரும்போது நாம் எந்தப் பேதமையும் பார்க்காமல் அவர்தம் படைப்பை மட்டுமே முன்னிறுத்திப் பார்க்கும் வகையில் படைப்புக் குழுமம் பெருமையுடன் வெளியிடுகிறது இத்தொகுப்பை.
படைப்பாளி "அகதா" அவர்கள் தன் ஆசிரிய(ர்)க் கண்களோடு ஓர் உலகத்தையும், ஆச்சரிய கண்களோடு மற்றோர் உலகத்தையும் பார்க்கிறார். அதனால்தான் ஓரிரவில் வரும் விண்மீன்களை ஓராயிரம் இரவானாலும் கண்களால் கணக்கிட இயலாது எனத் தெரிந்து வரிகளையே வானமாக்கி வாழ்வியலையே விண்மீன்களாக்கி கவிதையால் கணக்கிட்டு கடைசி ரயிலையும் முன்னால் கொண்டுவந்து முதல் நடைமேடையில் முன்னிறுத்தி இருக்கிறார். சாமானியர்களுக்கும் சட்டெனப் புரியும் எளிய மொழியில் இயல்பாக எடுத்துச் சொல்லும் மெல்லிய உணர்வலைகளே இவரது கவிதைகள். பெரம்பலூரை வசிப்பிடமாகக் கொண்ட தமிழ்த்துறை முனைவரான இவருக்கு இது முதல் தொகுப்பு. இவர் சமூக வலைத்தளங்களிலும் வார இதழ்களிலும் தன் முத்திரைக் கவிதைகளால் நன்கு அறியப்பட்டவர். மேலும் படைப்புக் குழுமத்தால் கவிச்சுடர் விருதும் பெற்றவர்.