நூல் பெயர் : கருப்பா இருக்கிறவன் பொய்சொல்ல மாட்டான் (கவிதைகள்)
ஆசிரியர் :
ஆண்டன் பெனி
பதிப்பு :
முதற்பதிப்பு - 2024
பக்கங்கள் :
88
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 100
எப்போதும் இலக்கியத்திற்கு இரு பக்கங்கள் உண்டு. எழுத்திலும் எழுதப்பட்ட வகைமைகளிலும்
தீவிரமான இலக்கியமாக இருப்பது ஒரு பக்கமாகவும், அத்தீவிர இலக்கிய எழுத்தை நகைச்சுவையாகவோ
அல்லது நையாண்டிப் பிரதிபலிப்புமிக்க உணர்வில் விமர்சிப்பது மறு பக்கமாகவும் இருக்கும்.
இன்னும் ஒரு படி மேலே போனால் அதுவே இலக்கிய பகடி. பகடி என்பது ஒரு எழுத்தாளர் அல்லது
கலைஞர், பொருள் அல்லது நிகழ்வு அல்லது வகையை நகைச்சுவையான விளைவை உருவாக்குவதற்காக
அசல் தன்மையை மிகைப்படுத்தி, பேச்சு மற்றும் மொழி நடையில் நையாண்டி மாதிரியான உணர்வை
வெளிப்படுத்துவதேயாகும். பகடியில் முக்கியமானது என்னவென்றால் அது ஆக்ரோஷமாகவோ, தீங்கிழைத்தோ,
வேண்டுமென்றே விமர்சிப்பது போலில்லாமல் கேள்வி கேட்பது போல கவனம் பெறச் செய்தலாகும்.
அப்படி பகடி செய்யப்பட்ட நிகழ்வுகளை எல்லாம் இலக்கியக் களத்தில் கபடியாடும் காட்சிகளாக
உருவாக்கப்பட்டிருப்பதே “கருப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்” நூல். இதில் உள்ள
ஒவ்வொரு பகடியும் வாசிப்பவரின் மனதுக்குள் ஊடுருவி இலக்கியத்திற்குள் நகைச்சுவையை இனிப்பாக
வழங்கிவிட்டுச் செல்லும் என்பதே இந்நூலின் பலம்.
கோவில்பட்டியைப் பிறப்பிடமாகவும், திருச்சியை வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி
ஆண்டன் பெனி அவர்களுக்கு இது பத்தாவது நூல். இவர் இன்றைய இலக்கிய உலகிலும் சமூக வலைத்தளங்களிலும்
தன் படைப்புகள் மூலம் நன்கு அறியப்பட்டவர். தனது படைப்புகளுக்காக ‘சௌமா’ இலக்கிய விருது
உட்பட எண்ணற்ற விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும் படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும்
மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தையும், ‘கவிச்சுடர்’ எனும்
உயரிய விருதையும் பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.