நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட தமிழ் இலக்கியம் செய்யுள், மரபுக்கவிதை, பா இனங்களைக் கடந்து சிறுகதை, நாவல், கட்டுரைகள், புதுக்கவிதை, நவீனம், பின்நவீனம் எனப் பல புதிய வடிவம் எடுத்த களமாக இக்காலம் திகழ்கிறது. சொல் பயன்பாடு, தொடர்ப் பயன்பாடு ஆகியவற்றில் எளிமையைப் பின்பற்றப்படுவது கதை இலக்கியத்தில்தான். அது சிறுகதையில் தொடங்கி நாவல் வரை நீடிக்கிறது. அவ்வாறான நாவலை, குறுநாவலாக சுருக்கி, அதில் திருநங்கைகளின் வாழ்வியலையும் வலிகளையும் வரிகளில் கொண்டு வந்திருப்பதே 'குரோமோசோம் பூக்கள்' நூல். இந்நாவலைப் படிக்கும் ஒவ்வொருவர் மனத்திலும் மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்வும், அவர்கள் சந்திக்கும் துயரும், அவர்கள் கடந்து வந்த பாதையும் கண்முன் கண்ட காட்சி போல திரையில் மலரும் என்பதே இந்நூலின் பலம்.
தஞ்சையைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி வசந்த லட்சுமி அவர்களுக்கு இது முதல் நூல். ஆசிரியர் பணியோடு கதாசிரியராகவும் திகழ்கிறார். இன்றைய இலக்கிய உலகிலும், சமூக வலைத்தளத்திலும், பிரபல பத்திரிகை மற்றும் வார இதழ்களில் தன் படைப்புகள் மூலம் நன்கு அறியப்பட்டவர். தினமலர்- வாரமலர் வழங்கிய கதைக்கான சிறப்பு பரிசு உட்பட எண்ணற்ற பரிசுகளையும் இவர் பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.